சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான ஆகஸ் 30 ஆம் திகதி தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாயகத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 30.08.2024 மாலை 5.00 மணியளவில் டிராபல்கர் சதுக்கம் முன்பாக இந்த கவயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நீதிகோரிய போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர் லண்டன் வாழ் உறவுகள், இளைஞர்கள் கலந்து கொண்டதுடன் நாட்டில் பலவந்தவமாக மறைத்து வைத்திருக்கப்பட்டும் காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே ? இனப்படு கொலையாளியை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து என காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.