தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ‘குரல் போராளியான’ சத்தியா என்கின்ற ஆசிரியர் ஞானகரன் அவர்களின் மறைவு துயரைத் தந்ததைப் போலவே, அவரது போராட்டகாலப் பணிகளின் கனதியையும் மீள் நினைவூட்டியிருக்கிறது.
‘சத்தியா’ என்ற பெயர் அவரது சிம்மக் குரலின் வீரியத்தால் எங்களிடத்தில் நிலைகொண்ட பெயராயிற்று. முன்னர் தமிழீழ வானொலியிலும், பின்னர் எங்கள் இனத்தின் குரலாகவே ஒலித்த புலிகளின் குரல் வானொலியிலும் அன்னாரது குரலின் கம்பீரம் தந்த எழுச்சியின் வீரியம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
போர் தின்னும் மண்ணின் போர்க்குரலாக ஒலித்த புலிகளின் குரலை, சர்வதேச வானொலிகளின் வழித்தடத்திற்கு இட்டுச்சென்ற பெருமை, சத்தியா அவர்களின் தெளிந்த – நறுக்குத் தெறிக்கும் உச்சரிப்பாலான செய்தி வாசிப்பின் தனித்துவத்தையும் சார்ந்திருந்தது.
மிகநேர்த்தியான செய்தி வாசிப்பாளராக, வானொலி அறிவிப்பாளராக, நேரடி வர்ணனையாளராக தனித்துவம் மிக்க தன் குரலையே ஆயுதமாக்கி போர்க்காலப் பங்காளியாக இருந்த அமரர்.சத்தியா அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்.
சிவஞானம் சிறீதரன்.
நாடாளுமன்ற உறுப்பினர்,
நாடாளுமன்றக் குழுத் தலைவர்,
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி.