முல்லைத்தீவு – குமுழமுனை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம்பகுதியில் அமைந்துள்ள நித்தகைக்குளத்தின் சீரமைப்புவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளநிலையில், குறித்த சீரமைப்பு வேலைகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 13.07.2025இன்றையதினம் நேரடியாகச்சென்று பார்வையிட்டதுடன், அங்கு விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட பொங்கல் வழிபாடுகளிலும் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் இவ்வாறு நித்தகைக்குளத்தின் சீரமைப்புவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளநிலையில், வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த குளத்தின்கீழான வயல்நிலங்களை வனவளத் திணைக்களம் ஏற்கனவே உடன்பட்டதைப்போன்று உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறிப்பாக ஆண்டான்குளம் நித்தகைக்குளத்தின்கீழ் தமிழ்மக்கள் பூர்வீகமாக விவசாயம் செய்துவந்தநிலையில், கடந்தகாலத்தில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக கடந்த 40வருடங்களாக குறித்த நித்தகைக்குளத்தின் கீழ் தமிழ்மக்களால் விவசாயம் செய்யமுடியாதநிலை ஏற்பட்டது.
இந்நிலையில் குறித்த நித்தகைக்குளம் மற்றும், குளத்தின் கீழான வயல்நிலங்கள் என்பவற்றை வனவளத்திணைக்களம் ஆக்கிரமிப்புச்செய்திருந்தது.
இத்தகையசூழலில் அப்பகுதி விவசாயிகள் மற்றும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருடைய தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து குறித்த குளம் வனவளத்திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டதுடன், குளத்தின் கீழான வயல்நிலங்களும் வனவளத் திணைக்களத்தால் விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில் தற்போது நித்தகைக்குளத்தின் சீரமைப்பு வேலைகளுக்கென நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, குளத்தின் சீரமைப்புவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அப்பகுதி விவசாயிகளின் அழைப்பை ஏற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த குளத்தின் சீரமைப்பு வேலைகளைப் பார்வையிட்டதுடன், அங்கு விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட பூசை வழிபாடுகளிலும் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாக நாம் இந்தப்பகுதி விவசாயிகளுடன் சேர்ந்து உரியதரப்பினரை வலியுறுத்திவந்த நிலையில் குறித்த பகுதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டதுடன், தற்போது இந்த குளத்தினைச் சீரமைப்பதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனவே இந்தக்குளத்தின் கீழ் எமது விவசாயிகள் நாற்பது ஆண்டுகளுக்கு பிற்பாடு விவசாயம் செய்யக்கூடிய நிலமைகள் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை இந்த குளத்தின் கீழான எமது மக்களுக்குரித்தான 1500ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்கள் காணப்படுகின்றன.
நீண்டகாலம் விவசாயம் செய்யமுடியாத நிலைகாணப்பட்டதால் குறித்த வயல் நிலங்கள் காடுகளாகக் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் குறித்த வயல்நிலங்கள் தமக்குரிய பகுதியென வனவளத்திணைக்களம் ஆக்கிரமித்து வைத்துள்ளது.
குறித்த வயல்காணிகளை விடுவிக்குமாறு வனவளத் திணைக்களத்தை தொடர்ந்து வலியுறுத்தியதற்கமைய மக்களுக்குரிய குறித்த குளத்தின் கீழான வயல்காணிகளை விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களமும் இணக்கம் தெரித்தது.
இருப்பினும் குறித்த வயல்காணிகள் உத்தியோகபூர்வமாக தம்மிடம் கையளிக்கப்படவில்லை என மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர். இந்தவிடயத்தில் ஏற்கனவே வனவளத் திணைக்களம் இணங்கிக்கொண்டதற்கிணங்க மக்களின் வயல் காணிகளை உடனடியாக மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர்பிரிவில் ஒதியமலைக்கிராமத்தில், கருவேப்ப முறிப்பு குளம் சீரமைக்கப்பட்டுள்ளபோதும் அதன் கீழ் உள்ள விவசாயக்காணிகளை வனவளத் திணைக்களம் விடுவிப்புச்செய்யாமல் இழுத்தடிப்புச்செய்கின்ற நிலமைகள் காணப்படுகின்றன. இதேபோலதான் துணுக்காய், மாந்தைகிழக்கு, புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று என அனைத்துப்பிரதேசங்களிலும் வனவளத் திணைக்களத்தின் செயற்பாடுகள் மிக மோசமாகக் காணப்படுகின்றன.
அந்த செயற்பாடுகள்போலல்லாது, இக்குளத்தின் கீழுள்ள எமது மக்களுடைய 1500ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாயக் காணிகளை வனவளத் திணைக்களம் ஏற்கனவே இணங்கியதற்கமைய உடனடியாக மக்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.