Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

சட்ட விரோத தொழிலாளருக்கு பொலிஸார் உடந்தையா? முல்லைத்தீவில் போராட்டம்!

குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும்  இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த  குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை விடுவிக்க கோரி

குறித்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (07.08.2023) காலை 10.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட குமுழமுனை தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் கஜபாகுபுர , சம்பத்நுவர, ஜனகபுர, கலியாணபுர பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினர் அத்துமீறி கடந்த (05.08) அன்று மீன்பிடியில் ஈடுபட்டதை தொடர்ந்து மீனவ சங்கத்தினருக்கும், பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 38 சிங்கள மொழிபேசும் மீனவர்களையும் , அவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் குறித்த பகுதி மக்களால் ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களில் ஒன்பது பேர் பொதுமக்களால் பொலிஸாரிடம்

ஒப்படைக்கப்பட்ட பின்னர் தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில். பதிவு செய்யப்பட்ட  ஹிச்சிராபும், குமுழமுனை தண்ணிமுறிப்பு சங்கத்தினை சேர்ந்த 17 பேர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பொதுமக்கள், மீனவர் சங்க உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், அரசியல் பிரமுகர்கள் என  பலரும் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த போராட்டத்தில் பொலிஸாரிடம் ஒப்படைத்தவர்கள் தப்பி சென்றது எப்படி?, உயிர் போனாலும் உரிமையை விட்டு கொடுக்கோம், தமிழ் தேசத்தில் தமிழருக்கு உரிமை இல்லையா?, எமது வாழ்வாதாரத்தில் கை வைக்காதே, சட்ட பூர்வ தொழிலாளர்களை கைது செய்தது எவ்வாறு, நிறுத்து நிறுத்து பெரும்பான்மையினரின் அத்து மீறலை நிறுத்து, சட்டத்தை மீறி தொழில் செய்வோரை தண்டிக்க யாரும் இல்லையா? அரச அதிகாரிகளே,  தமிழ் பேசும் மீனவர்களின் உடமைகளை நாசமாக்காதே, சட்ட விரோத தொழிலாளருக்கு பொலிஸார் உடந்தையா? போன்ற பல்வேறு வாசகங்களையுடைய  பாதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தின் பின்னர் தமிழ் பேசும் மீனவ சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அடங்கிய மகஜர் வாசித்து காட்டியதன் பின்னர் அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.  

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அரசாங்க அதிபர் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி பிரச்சினையை கதைத்ததன் பின்னர் நிரந்தர தீர்வினை பெற்றுத்தர முயற்சி செய்வதாகவும், கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *