மடுமாதா திருத்தலத்திற்கான பாதயாத்திரை முல்லைத்தீவு- பாண்டியன்குளத்தை வந்தடைந்தது!
மன்னார் மடு திருத்தலத்திற்கான பாதயாத்திரை மேற்கொள்வோர் இன்றையதினம் மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியை வந்தடைந்தனர்
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்திலிருந்து நேற்று அதிகாலை நான்கு மணிக்கு ஒரு தொகுதி யாத்திரிகர்கள் மடுவுக்கு புறப்பட்டுள்ளனர்
இவர்கள் A9 வீதி வழியாக முறிகண்டியில் இருந்து கொக்காவில் வீதி வழியாக ஐயன்கன்குளம் வரை சென்று இரவு தங்கியிருந்தனர்.
இன்று காலை இவர்கள் ஐயன்கன் குளத்தில் இருந்து மல்லாவி வழியாக நட்டாங்கண்டலைச் சென்றடைந்து, நாளை 29-06-2022 புனித மடு திருத்தலத்தை சென்றடைய உள்ளனர்
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் நீங்கவும் , நாட்டு மக்கள் அனைவரும் சுபீட்சமாக வாழவும் குறித்த பாத யாத்திரை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்திலிருந்து வருடம் தோறும் பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் மடு திருத்தலத்தில் ஆடிமாதம் 2ம் திகதி இடம்பெறும் உற்சவத்தில் கலந்துகொள்வர்
இதே வேளை கடந்த வருடம் மடு திருத்தல ஆடி பெருவிழாவிற்காக வருகைதந்த ஒரு தொகுதி பாத யாத்திரிகர்கள் கொரோனா நிலைமையினை காரணம் காட்டி பாண்டியன்குளம் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது