தனிமைப்படுத்தல் நிலையத்திற்குள் செல்ல மனித உரிமை அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு!

0 68

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தினுள் அமையப்பெற்றுள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் சங்க செயற்பாட்டாளர்களை பார்வையிட சென்ற மனித உரிமை அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலக அதிகாரிகள் இன்று காலை கேப்பாபிலவு விமானப்படைத்தளம் சென்றுள்ளார்கள்.


உள்ளே தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை பார்வையிட உள்ளே செல்ல அனுமதி கோரியுள்ளார்கள் விமானப்படை வாசலில் நின்ற பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கான அனுமதியினை மறுத்துள்ளார்கள்.


யாழ் மாநகரமுதல்வர் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தலில் இருக்கும் இலங்கை ஆசிரியர் சங்க செயற்பாட்டாளர்களுக்கு பொருட்கள் வழங்கிவைத்துள்ளார்கள்.

உள்ளே தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருப்பவர்களுக்கு வெளியில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் விமானப்படையினரின் வாசலில் உள்ள காவலரணில் வழங்கிவைக்கவேண்டும்.


இன்னிலையில் பொருட்களின் பையில் யாருக்கு என பெயர் எழுதவேண்டும்,பொருட்கள் கொண்டு செல்பவர்கள் விமானப்படையினரால் அடையாளத்தினை உறுதிப்படுத்தப்பட்டு வருவதுடன் விமானப்படை வாசலில் ஊடகவியலாளர்களோ அல்லது பொருட்களை கொண்டு செல்பவர்களோ ஒளிப்படங்கள் எடுக்க முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்டுள்ளது.


இவை அனைத்தும் கேப்பாபிலவு வற்றாப்பளை முதன்மை வீதியில் அமைந்துள்ள விமானப்படை வாசலில் உள்ளே எவரும் அனுமதிக்கப்படாத நிலையில் நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு செயற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.