இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் 100 ஒக்சிஜன் கருவிகள் வழங்கி வைப்பு !

0 25

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் பாவனைக்காக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் 100 ஒக்சிஜன் கருவிகளை (Oxygen Concentrators -10 L) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று (22) அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் திரு.ஜகத் அபேசிங்க அவர்களினால் குறித்த ஒக்சிஜன் கருவிகள் கௌரவ பிரதமரிடம் வழங்கப்பட்டன.

செஞ்சிலுவை சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தினால் இந்த 100 ஒக்சிஜன் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கௌரவ பிரதமரின் வேண்டுகோளுக்கமைய எதிர்வரும் வாரங்களிலும் செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக மேலும் மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் திரு.ஜகத் அபேசிங்க அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் கையளிக்கப்பட்ட ஒக்சிஜன் கருவிகள், அச்சந்தர்ப்பத்திலேயே கௌரவ பிரதமரினால் கொவிட்டினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்துவதற்காக சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவல் ஆரம்பிக்கப்பட்டது முதல் மக்களை அதிலிருந்து பாதுகாப்பதற்கும் நிவாரணமளிப்பதற்கும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் பெரும் பங்கு வகித்துள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில், சுகாதார அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னிஆராச்சி, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.