உப்புமாவெளி பகுதியில் இடம்பெற்றது சட்டவிரோத மணல் அகழ்வே!

0 200

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்புமாவெளி பகுதியில் யாழ் ஆயர் இல்ல காணியில் சட்டவிரோதமாக இடம்பெறும் பாரிய மணல்கொள்ளை தொடர்பில் அண்மையில் ஊடகவியலாளர்கள் வெளிக்கொண்டு வந்திருந்தனர்


குறித்த பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்டபூர்வ மணல் அகழ்வு காரணமாக அங்குள்ள  இயற்கை மண்திட்டுக்கள் அழிவடைந்து செல்வதாகவும் இதனால் எதிர் காலத்தில் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமானால் தாம் பாரிய அளவிலான பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் எனவும் பொதுமக்கள் சுட்டிக் காட்டிய நிலையில் குறித்த விடயம் தொடர்பில் செய்தி அறிக்கையிட ஊடகவியலாளர்கள் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்


இந்நிலையில் குறித்த இடத்தில் ஒரு பகுதியில் சட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு குறித்த இயற்கை மண்திட்டுக்கள் காணப்படும் பகுதிகளில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றதோடு இன்னொரு பகுதியில் எந்தவித அனுமதியும் இன்றி சுமார் 5000 டிசம்பர் மணல் அகழ்வு செய்து குவிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது

இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டுள்ள மணல் அகழ்வு தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் ஊடகங்களால் முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டு நிலமைகளை காண்பித்தனர் இந்நிலையில் முல்லைத்தீவு பொலிசார் குறித்த மணலினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு குறித்த இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது


நீதிமன்றம் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை செய்தவர்களை கைது செய்யுமாறு தெரிவித்தது
ஊடகங்களில் செய்தி வெளிவந்ததன் பின்னணியில் மணல் அகழ்வு தொடர்பில் அனுமதி வழங்கும் அனைத்து திணைக்களங்களையும் 15.06.2021 சம்பவ இடத்திற்கு வருகை தருமாறு  மாவட்ட செயலகம் அழைப்பு விடுத்துள்ளனர்

இந்நிலையில் குறித்த இடத்திற்கு 15.06.2021 அன்று வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட காணி உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், குறித்த பகுதி கிராம அலுவலர், புவிச்சரிதவியல் சுரங்கங்கள் அளவைகள் பணியகம்,சுற்றச்சுழல் திணைக்களம்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், பொலிசார்,விசேட அதிரடிப் படையினர் என அனைத்து திணைக்கள அதிகாரிகளும் குறித்த மணல் அகழ்வு செய்து குவிக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று நிலமைகளை பார்வையிட்டனர்


இதன்போது குறித்த பகுதியில் இடம்பெற்ற மணல் அகழ்வு செய்து குவிக்கப்பட்டுள்ள விடயம் எந்த அனுமதிகளுமின்றி. சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளது என்பதை அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்

இந்நிலையில் குறித்த மணல் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களையும் அதற்கு பயண்படுத்திய இயந்திரங்கள் போன்றவற்றையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொலிசாரிடம் அதிகாரிகள் கோரியுள்ளனர்


முற்றுமுழுதாக சட்டவிரோத மாக இடம்பெற்ற செயற்பாடு தொடர்பில் பொலிஸார் இன்றுவரை யாரையும் கைது செய்யாமையானது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது
அத்தோடு குறித்த பகுதியில் ஏற்பட கூடிய இயற்கை அனர்த்தங்களை கருத்தில் கொண்டு இங்கு இடம்பெறும் சட்டபூர்வ சட்டவிரோத மணல் அகழ்வுகளை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.