மதவளசிங்கன் குளத்தின்கீழுள்ள நெற்பயிற்செய்கைகளில் நோய்த்தாக்கம்!

0 75

முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவை நிலையப்பிரிவுக்குட்பட்ட, மதவளசிங்கன்குளத்தின்கீழ் செய்கைபண்ணப்பட்டுள்ள நெற்பயிற்செய்கைகள் நெற்சப்பி, நெற்கருக்கல் உள்ளிட்ட நோய்களால் வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கு பயிற்செய்கையில்ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு தற்போதுள்ள கொவிட் – 19 அசாதாரண சூழ்நிலையினால்,  குறித்த நோய்த்தாக்கங்களுக்குரிய கிருமிநாசினிகளைப் பெற்றுக்கொள்வதில் தாம் பெரிதும் இடர்படுவதுடன், கிருமிநாசினிகளின் விலைவாசிகளும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையிலும் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் கிருமிநாசினிகளைப்பெற்று, தமது நோய்த்தாக்கம் உள்ள நெற்செய்கைகளில் கிருமிநாசினிகளை பலதடவைகள் தாம் விசிறியபோதும், நோய்த்தாக்கங்கள் கட்டுப்படவில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை முன்பு கமநல சேவை நிலையத்தினால் தமக்கு ஒருஏக்கர் நெற்செய்கைக்கு 20கிலோக்கிராம் உரமானியம் வழங்கப்பட்டதாகவும், தற்போது ஒரு ஏக்கருக்கு 8கிலோக்கிராம் உரமானியமே வழங்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தமது பயிற்செய்கைகளுக்கு உரம் போதாத நிலைகாணப்படுவதுடன், வெளியே கடைகளிலும் உரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் வாழ்வாதாரத்தை நோக்காகக் கொண்டு தம்மால் செய்கைபண்ணப்பட்டுள்ள நெற்பயிற்செய்கைகள் அழிவடையும் நிலையில்உள்ளதாகவும் அவர்கள்மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவேஉரிய அதிகாரிகள் நேரடியாக வருகைதந்து தமது நெற்பயிற்செய்கைகளை பார்வையிடுவதுடன், தமது பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.