தொற்றுக்குள்ளான பல்கலை மாணவர்களுக்கு சிகிச்சை நிலையத்தில் பரீட்சை!

0 0

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற 4 மாணவர்கள் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகி தற்போது அவர்கள் பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலை கொவிட் – 19 இடைநிலைப் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்தே அவர்கள் பரீட்சை எழுதி வருகின்றார்கள். கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலை கலாசார பீடத்தின் இறுதி வருட இரண்டாம் தவணைப் பரீட்சையையே அவர்கள் இவ்வாறு எழுதி வருகின்றார்கள்.

இது தொடர்பில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.கெனடி கருத்துத் தெரிவிக்கையில்,

எமது பல்கலைக்கழகத்தின் 4 மாணவர்கள் கெரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டு, அவர்கள் அனைவரும் மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலை கொவிட் – 19 இடைநிலைப் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இந்நிலையில் எமது மாணவர்களுக்குரிய பரீட்சைகள் 29, 30, 31, ஆகிய 3 நாட்களும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்குரிய நடவடிக்கைகளை இலங்கையிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்கள் எடுக்கவில்லை.

ஆனால் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலை கலாசார பீடம் எமது பல்கலைக் கழகத்தின் உப வேந்தரின் அனுமதியுடன் துணிந்து செயற்பட்டு, சகல வைத்திய நெறிமுறைகளையும், பின்பற்றி, பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையில் இருந்தவாறே பரீட்சைக்குரிய மண்டப ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு எமது 4 மாணவர்களும் தற்போது பரீட்சை எழுதிவருகின்றார்கள்.

மேலும் ஒரே நேரத்திலும் கிழக்குப் பல்கலைக்கழத்திலும், பெரியகல்லாறு வைத்தியசாலையியுலும் எமது மாணவர்கள் பரீட்சையை எழுதி வருகின்றனர். 3 நாட்களும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரையில் பரீட்சை நடைபெற்று வருகின்றது.

இதற்குரிய சகல ஒழுங்குகளையும் சுகாதாரத்துறையினர் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள். அதனை நாங்கள் சி.சி.ரிவி கமரா மூலம் கண்காணித்து வருகின்றோம். கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் வைத்தியசாலையில் இருந்து கொண்டே பரீட்சையை எழுதுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய எமது பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எவ்.சி.றாகல், பதிவாளர் பகீரதன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அ.லாதாகரன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மயூரன், மாவட்ட கொரோனா தடுப்பு இணைப்பாளர் வைத்திய கலாநிதி அச்சுதன், மற்றும், பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, சிறிவித்தியன், உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

எமது இந்த செயற்பாட்டைப்போல் ஏனைய பல்கலைக் கழகங்களும் பின்பற்றினால் நன்றாக அமையும், காரணம் மாணவர்களுக்கு எதுவித பயமோ, அச்சமோ இல்லாமல், அவர்கள் தமது பரீட்சையை சுயமாக எழுதுவதற்கு, முடியும். இதுவரையில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய கல்விப் பொதுத்தர உயர்தர மாணவர்களுக்கு மாத்திரம் தான் இவ்வாறு தனியாக பரீட்சை நடத்தப்பட்டது.

இது இலங்கை பல்கலைக்கழக வராலாற்றிலே முதல் தடவை நடைபெறுகின்றது எனவும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.கெனடி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.