மடு உண்ணாவிரத போராட்டம்! 10 நாட்களுக்குள் தீர்வு – விவசாயிகள் எடுத்துள்ள முடிவு

0 0

மன்னார் மாவட்டத்தில் தனியார் நிறுவனமொன்றிற்கு காணி வழங்கும் நடவடிக்கைளுக்கெதிராக பெரிய பண்டிவிரிச்சான் கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த போராட்டம் நேற்று மதியம் தாற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கோயில் மோட்டை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமாக உள்ள விவசாய நிலங்களில், இப்பகுதி மக்கள் கடந்த 35 வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த மக்கள் விவசாயம் செய்துவந்த காலப்பகுதியில் மடு திருத்தல பரிபாலனசபை அதற்கான குத்தகையை பெற்றுவந்துள்ளனர், இந்நிலையில் அண்மையில்தான் குறித்த காணி அரசகாணியென தெரியவந்ததுள்ளது.

இதனையடுத்து அந்தக்காணிகளை தனியார் தொண்டு நிறுவனமொன்றிற்கு வழங்குமாறு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வலியுறுத்தியதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையிலேயே பூர்வீகமாக இப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள், குறித்த காணிகளை தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்து நேற்று முன்தினம் காலை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டமொன்றை மேற்கொண்டு வந்த நிலையில், பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்றும், காத்திரமான பதில் இதுவும் கிடைக்காத நிலையில் நேற்று வரை தொடர்ந்தது.

இந்நிலையில் நேற்று காலை போராட்ட களத்திற்கு ஆளுநரின் பிரதிநிதியாக வடமாகாண உதவி காணியானையாளர் ராஜாமல்லிகை வருகைதந்து விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்ததுடன், விவசாயிகள் விவசாயம் மேற்கொள்ளும் கோயில் மோட்டை வயல்காணிகளை பார்வையிட்டதுடன், விவசாயிகளின் கோரிக்கையை அடங்கிய மகஜர் ஒன்றையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து 10 நாட்களுக்குள் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமென போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் தொலைபேசி ஊடாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும் திங்கள் கிழமை வடமாகாண ஆளுநர், தனது அலுவலகத்தில் விவசாயிகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.