முள்ளிவாய்க்கால் கஞ்சி இரண்டாம் நாள் புதுக்குடியிருப்பில் முன்னெடுப்பு !

0 18

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடிய காலகட்டத்தில் மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்தனர் அந்த மக்கள் உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கியது முள்ளிவாய்க்காலில் வழங்கப்பட்ட கஞ்சியே ஆகும்
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தமிழர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று 13 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன

அந்த வகையிலே இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மக்கள் உணவின்றி அல்லல்பட்ட போது தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தினால் கஞ்சி வழங்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றது இந்த கஞ்சியை பெற்றுக்கொள்வதற்காக பசியில் தவித்த மக்கள் சென்று வரிசையில் நின்ற போது அங்கும் இராணுவத்தினரின் பல்வேறு தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களும் உண்டு

இவ்வாறான நிலையிலேயே இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே அவர்களுடைய உணவான கஞ்சியின் வரலாற்றினை அல்லது அவர்களுக்கு அந்த காலப்பகுதியில் பசியாற்றிய இந்த கஞ்சியினை வரும் சந்ததியினருக்கும் தெரிவிக்கும் முகமாக தமிழின அழிப்பு வாரத்தின் ஆரம்ப நாளான 12.05.2022 நாளில் இருந்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்குவதற்கு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கமும் பொது அமைப்புகளும் இணைந்து வேலைத்திட்டமொன்றினை வடகிழக்கெங்கும் முன்னெடுக்கின்றன.


12.05.2022 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பொது சந்தை பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நாளை ஓட்டுசுட்டான் பிரதேசத்தில் வழங்கிவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.