நிவாரணங்கள் வழங்குவோரின் கவனத்துக்கு!

0 220

அரச சார்பற்ற நிறுவனங்களாக இருந்தாலும் சரி, தன்னார்வ தொண்டு அமைப்புகளாக இருந்தாலும் சரி நீங்கள் நிவாரணங்களை வழங்குவதாக இருந்தால் அல்லது அதற்குரிய விருப்பம் இருந்தால், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் ஊடாக மாவட்டச் செயலாளருக்கு  தெரியப்படுத்தி, ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அந்த நிவாரணங்களை வழங்குமாறு, முல்லைத்தீவு மாவட்ச் செயலாளர் க.விமலநாதன் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தரைத்த அவர், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்குரிய முதற்கட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், இதற்கமைய, முதல் கட்டமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5,000 ரூபாய் பெறுமதியான பொருள்கள் வழங்குவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மிக விரைவில் அவர்களுக்கான பொருட்களை அவர்களுடைய வீடுகளுக்கு பிரதேச செயலகத்தின்  ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சில இடங்களில், தங்களுக்குத் தெரியாமல், பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்களுக்கு தெரியாமல் சிலர் நேரடியாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகின்றார்களெனத் தெரிவித்த அவர். இது நிறுத்தப்பட வேண்டுமெனவும் ஏனெனில், தாங்கள் ஒரு வழியின் ஊடாக செல்கின்ற போது அதனுடைய இரட்டிப்பு தன்மையை குறைத்துக்கொள்ள முடியுமெனவும் கூறினார்.

‘இதனால் மக்களிடையே சில போட்டிகளும் ஏற்பட்டு, தனிமைப்படுத்தி இருக்கின்ற பகுதிகளில் உள்ள மக்கள் கூட தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதை மறந்து நிவாரணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக, மக்கள் ஒன்றுகூடும் தன்மை காணப்படுகிறது. எனவே, யாராக இருந்தாலும், நிவாரணங்களை வழங்குவதாக இருந்தால், ஒரு ஒழுங்கு முறையின் ஊடாக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அந்த நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும்’ எனவும், மாவட்டச் செயலாளர் வலியுறுத்தினார்.

மேலும், அண்மையில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளைஎடுத்திருப்பதாகவும், அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.