முல்லைத்தீவில் நட்ட ஈட்டுக் கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கி வைப்பு!

0 105

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் இழப்பீட்டு அலுவலகத்தின் ஊடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நட்டஈட்டுக் கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் ஏற்பாட்டில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் பங்குபற்றலுடன் மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இன்று(01) காலை 10.00மணிக்கு இடம்பெற்றுள்ளது.

குறித்த கொடுப்பனவின் கீழ் கரைதுறைப்பற்றுபிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 30பயனாளிகளும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 26பயனாளிகளும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 49பயனாளிகளும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 15பயனாளிகளும், மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 25பயனாளிகளுமாக மாவட்டத்தில் 145பயனாளிகளும் பொது இடங்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவின் கீழ் நான்குமாக 149 நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகளுக்காக ரூபா 10.2மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பயனாளிகளின் இருப்பிட தொலைவுத்தன்மை கருதி முதற் கட்டமாக இன்று கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான் ஆகிய பிரதேச செயலக பயனாளிகளுக்கான காசோலைகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த பயனாளிகளிடம் வழங்கிவைத்தார்.

நாளை துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மற்றும் பயனாளிகள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.