குருந்தூர்மலை குளத்தில் மீன்பிடிக்க தடை !

0 6

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிக்க சென்ற உள்ளூர் கிராம மக்களுக்கு இராணுவம் தடை விதித்துள்ளதோடு மீன் பிடித்த ஆறுமுகத்தான்குளத்தினை சேர்ந்த  கிராமவாசிகளை தடிகளை கொண்டு மிரட்டி அனுப்பியுள்ள சம்பவம் கடந்த 16 .02.2021 அன்று இடம்பெற்றுள்ளதாக மீன்பிடிக்க சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த குருந்தூர் குளத்துக்கு அண்மையாகவுள்ள குருந்தூர் மலையில் தொல்லியல் ஆய்வுகளை இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொண்டுவரும் நிலையில் அப்பகுதியில் காவலரண் அமைத்து தங்கியுள்ள படையினர் வலைகளை கொண்டும் தூண்டில் போட்டும் குளத்தில் மீன்களை தாம் பிடித்து உண்டுவரும் நிலையில் வயித்து பசிக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் தூண்டில் போட்டு மீன்பிடிக்க செல்லும் தம்மை அச்சுறுத்துவதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் (22) மீண்டும் மீன்பிடிக்க சென்றவர்களை அங்கு காவல் கடமையில் நின்ற இராணுவத்தினரின் ஏவலில் அவர்களோடு நின்ற பொலிஸார் இரண்டுபேர் மீன் பிடிக்க தடை செய்துள்ளனர்.

இதன்போது தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை குளத்தில் கட்டி மீன்பிடிக்கும் நடவடிக்கையில் இனம் தெரியாதவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் சட்ட விரோதமான அந்த நடவடிக்கையை தடுக்காத பொலிஸார் தூண்டில் போட்டு மீன்பிடிக்கவந்த தம்மை மிரட்டி தடை செய்ததாக கிராம வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இராணுவம் வலைகளை பயன்படுத்தி இதே குளத்தில் மீன்பிடித்து உண்ண முடியும் என்றால் இதே கிராம  சேவகர் பிரிவில் வாழும் தாம் ஏன் மீன் பிடிக்க தடைவிதிக்க படுவதாக ஆறுமுகத்தான்குள மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை இந்த குளம் அமைந்துள்ள பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை குள பகுதிக்கு செல்ல முடியாது என இராணுவத்தினர் தடைவிதித்ததோடு அனுமதி பெற்றுவந்தால் தான் குளத்துக்கு செல்லலாம் என திருப்பி அனுப்பியுள்ளனர். ஆனால் இதே குளம் அமைந்துள்ள பகுதிக்கு  வேறு நபர்கள் அனுமதிக்க படுகின்றமையும் குறிப்பிடிடதக்கது.  

Leave A Reply

Your email address will not be published.