அரசியல் கைதிகளின் விடுதலைக்கு புது வியூகம் – ஸ்ரீகாந்தா

0 84

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டான வேண்டுகோளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க முடியுமானால் ஒருவேளை அது வெற்றியளிக்கக் கூடும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கு மலையகம் மற்றும் கொழும்பு மாவட்டம் சார்ந்த 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கட்சிகளின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இயல்பாகவே அக்கறை கொண்டிருப்பதை எவரும் மறுத்திட முடியாது.

அரசியல் முரண்பாடுகளின் மத்தியிலும் இந்த நிலைமை காணப்படுவதால், ஓர் பொது வேண்டுகோள் தொடர்பில் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது சாத்தியமானது.

ஆயினும் தமிழ் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்று அரசாங்கத்தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அவர்களின் விவகாரத்தை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் என்ற அடிப்படையில் இனியாவது அணுகுவது காலத்தின் கட்டாயத் தேவையாகும் என ஸ்ரீகாந்தா தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தக் கைதிகள் அரசியல் கைதிகளா? என்பதை சர்ச்சை ஆக்கி விவாதப் பிரதிவாதங்களுக்கு இடமளிக்காமல், அவர்களின் விடுதலையை மாத்திரமே இலக்காகக் கொண்டு, அதற்காக சாத்தியமான சகல வழிகளிலும் முயற்சிப்பதே பொருத்தமானது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான தமிழ்க் கைதிகள் என்று அவர்களை குறிப்பிடுவதால் எதனையும் இழக்கப்போவதில்லை.

இந்த தமிழ் கைதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்துமே அரசியற் பின்னணி கொண்டவை என்ற உண்மை ஒரு போதும் மறுக்கப்பட முடியாதது.

சட்டத்தை பொறுத்தவரையில் இந்தக் கைதிகள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் என்ற ரீதியில், மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் அனைவரினதம் விடுதலைக்கான ஓர் பொது வேண்டுகோளில் இணைந்து கொள்வதில் அரசாங்க சார்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட எந்த தயக்கமும் இருக்க முடியாது.

ஆகவே பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சகல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓர் கூட்டான கோரிக்கையை சமர்ப்பிப்பது இன்றைய நிலையில் இந்த விடயத்தில் மிகவும் அவசியமானது.

மொத்தம் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக ஒரே குரலில் உரிய கோரிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் முன்வைத்தால் அதற்கு உரித்தான கணிப்பினை கருத்தில் கொண்டவராக அவர் அதனை பரிசீலிக்க வேண்டி இருக்கும்.

எனவே இந்த நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்கும் விதத்தில் தமிழ்க் கைதிகளின் விடுதலைக்காக தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கும் ‘குரலற்றோர் அமைப்பு’ செயலில் இறங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.