Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

சரத்வீரசேகரவின் கருத்திற்கு நடவடிக்கை-நீதித்துறை இயங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை!

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவமானமாக கருத்துரைத்தமைக்கு சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதுவிடின் நீதித்துறை இயங்குவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரி.பரஞ்சோதி தெரிவித்தார்.

சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் கண்டன போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன் போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரையானது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, நீதிமன்ற நடவடிக்கைகள், வழங்கப்பட்ட கட்டளைகள் தொடர்பாகவும் அவமானமான முறையிலே பேசியிருக்கிறார்.

நீதித்துறை சுதந்திரமாக செயற்பட வேண்டிய ஒன்று. குருந்தூர் மலை பிரச்சினை என்பது 2018 ஆம் ஆண்டு ஒரு வழக்காக தாக்கல் செய்யப்பட்டு காலத்திற்கு காலம் தேவையான கட்டளைகள் வழங்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

ஆனால் அந்த நேரத்தில் கற்களும், மலைகளும் தான் இருந்தன. அப்போது தொல்பொருள் செய்வதாக கூறி தொல்பொருள் குழுவினர் வந்திருந்தார்கள். படிப்படியாக கட்டளைகள் வழங்கப்பட்டிருந்தாலும் அங்கே ஒரு விகாரையை நிறுவி நாளாந்த பூஜைகளை செய்யுமளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

சட்டத்தை, நீதிமன்ற கட்டளைகளை மதிக்காமலும் செயற்பட்டிருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அதனை துஷ்பிரயோகம் செய்து நீதிபதியை, நீதித்துறை சுதந்திரத்தை பாதிக்கின்ற வகையிலே செயற்பட்டிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு எதிராக உரிய நடவடிக்கையை சட்டத்துறையினரும் உரிய அதிகாரிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாராளுமன்றத்திலே சிறப்புரிமை உண்மையான விடயம் அதனை துஷ்பிரயோகபடுத்த கூடாது. அங்கே சபாநாயகர் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற இவ்வாறான அவதூறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போது எதுவுமே பேசாது வாய்மூடி மௌனியாக இருந்திருக்கிறார்.

தடுக்க வேண்டிய இடத்திலே தடுக்காமல் இருப்பதும் பேச வேண்டிய இடத்திலே பேசாமல் இருப்பதும் பிழையான நடவடிக்கையாகும்.

நீதித்துறை சுதந்திரமாக செயற்பட யாரும் தலையீடு செய்யக்கூடாது. சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய பாராளுமன்றத்திலே , சட்டத்தை உருவாக்குகின்ற பாராளுமன்றத்திலே நீதிமன்ற சுதந்திரத்தை பாதிக்கின்ற வகையிலும் தனிப்பட்ட நீதிபதிகளின் சுயாதீன தன்மையை கேள்விக்குறியாக்குகின்ற வகையிலும் செயற்படுவது உண்மையிலே தவிர்க்கப்பட வேண்டும். இது நீதித்துறைக்கு ஏற்பட்டிருக்கின்ற பாரிய அவமானமாக கருதுகின்றேன்.

குறித்த பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால் அதற்கெதிராக தொடர்ந்து தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொண்டு அதற்கான தீர்வுகாண வேண்டிய தேவைப்பாடுகள் ஏற்படும் என்பதையும் இதற்கு சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது விட்டால் நீதித்துறை இயங்குவதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.

சட்டத்துறையை தாக்குகின்ற போது நீதிபதிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்துகின்ற போது நாங்கள் குரல் கொடுப்போம். நடவடிக்கை எடுப்போம் அது சம்பந்தமாக உறுதியாக இருக்கின்றோம் என்பதனை கூறிக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *