G.V.பிரகாஸ் இசையமைப்பில் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவனின் பாடல் தென்னிந்திய திரைப்படத்தில்!

ஈழத்தில் கலைத்துறையில் சாதித்து வரும் பாடலாசிரியர் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன்.!

யுத்த பூமியில் வாழ்ந்து, யுத்தம் சப்பித் துப்பிய எச்சமாக வாழ்ந்துவரும் ஈழத்து
எழுத்தாளர் தன.ரஜீவன் அவர்கள் இன்று இசைத்துறையில் கொடி கட்டிப்பறக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.பல இன்னல்கள் துன்ப துயரங்களையும் தாண்டி சாதித்து தனது முயற்சியில் பெருவெற்றி கண்டுவருகின்றார்.

தென்னிந்திய பிரபல திரை நட்சத்திரம்G V பிரகாஸ் (இசையமைப்பாளர் மற்றும் நடிகர்) அவர்களின் தயாரிப்பில் “நாம்” பாடல் இவ் வருடம் மார்கழி மாதம் மிகப் பிரம்மாண்டமாக வெளியீடுகாணவுள்ளது.

இப்படைப்பில் ஈழத்தின் பிரபல பாடலாசிரியர் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன் ( பாடலாசிரியர், உளநல ஆலோசகர்) அவர்கள் பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.

இவர் சிறுவயது தொடக்கம் இசையின் மீதும் கலைத்துறையின் மீதும் கொண்ட ஆர்வத்தால் சங்கீதத்தை முறையாக கற்றதோடு, தனது முயற்சிகளில் எப்போதும் பின்வாங்கியதுமில்லை.

குறித்த பாடலாசிரியர் இதுவரைக்கும் 300ற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். “செஞ்சோலை பாடல்கள் தொடக்கம் ஆனையிறவு நாயகனே” பாடல் தொட்டு ஈழத்தின் முதன்மையான ஆலயங்களுக்கும் பாடல்களை எழுதியுள்ளார்.

இதுவரை எழுச்சி பாடல்கள், பக்தி பாடல்கள், சினிமா பாடல்கள், பாரம்பரிய தமிழர்களின் கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், பிள்ளையார் நடனம், கும்மி, வரவேற்பு நடனம், பிள்ளையார் நடனம், புலி நடனம் போன்றவற்றையும் எழுதியுள்ளதோடு வாழ்த்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

அண்மையில் பட்டிதொட்டி எல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கும் “சுழிபோட்டு செயல்தொடங்க வைத்தவா” பாடலை எழுதிய பெருமையும் இவரையே சாரும்.

நடிகராகவும் பாடகராகவும் அறிவிப்பாளராகவும் திரைகதை எழுத்தாளராகவும் இயக்குனராகவும் மட்டுமன்றி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வு எழுத்தாளர் என பன்முக திறன்களைக்கொண்டவராகவும் விளங்கிவருகின்றார்.

இந்திய சினிமா நட்சத்திரங்களோடு இணைந்து 20ற்க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளதோடு அண்மையில் இந்திய ஈழத்து கலைஞர்களின் உருவாக்கத்தில் வெளிவரவுள்ள சினிமா படத்தில் நடித்துள்ளதோடு, அப் படத்தில் இரு பாடல்களை எழுதியுள்ளதோடு திரைப்படத்திற்கான திரைகதையையும் எழுதி உதவி இயக்குனராகவும் செயற்பட்டுள்ளார்.

இவர் அரச உத்தியோகத்தர் என்பதையும் கடந்து சமூக சேவைகளையும் கிடைக்கும் நேரங்களில் முன்னெடுத்து வருகின்றார். இதுவரை இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களையும் பனை விதைகளையும் நாட்டியுள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள், தலைமைத்துவ பயிற்சி நெறிகள் போன்றவற்றை பாடசாலைகள் மற்றும் கிராம மட்டங்களில் அதிகளவு முன்னெடுத்துள்ளார்.

இவ்வாறு பல திறமைகளை தன்னகக்தேகொண்டு ஆர்ப்பாட்டமில்லாமல் தனது பயணத்தை முன்னெடுக்கும் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவனின் கலைப்பயணம் வெற்றிபெற நாம் வாழ்த்துவதோடு, இவரைப்போன்ற கலைஞர்களை வாழும்போதே வாழ்த்துவது எமது தலையாய கடமையாகும்.

Tagged in :

Admin Avatar