முல்லை கலைஞர்களின் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து மட்டு-அமிர்தகழியில்..

முல்லைத்தீவு கலைஞர்கள் முல்லைமோடி நடையில் நடித்து வரும் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேற்றப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் பிள்ளையார் ஆலயத்தின் திருவிழாவினை முன்னிட்டு கிழக்கு பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் உள்ளுர் கலைகளுக்கான விழா கடந்த 31.07.2024 மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தினால் பாரம்பரிய அரங்காற்றுகைகளும்,காட்சிப்பொருளும் என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைப்பீட தலைவர் துஸ்ஸந்தி சபயசிப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வ.கனகசிங்கம் அவர்கள் சிறப்பு அதிதீயாக கலந்து கொண்டார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீட பீடாதிபதி,நுண்கலைத்துறையின் இணைப்பாளர்,மட்டகளப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நெறிகளின் நிர்வாக பணிப்பாளர், உள்ளிட்டவர்ள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

இதன்போது பாரம்பரிய இசைக்கூடம் மற்றும் வட்டக்களரி கொட்டகை என்பன அதிதீகளால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு தமிழர்கள் மத்தியில் கூத்து மரபில் வடமோடி,தென்மோடி என இரண்டு வகையான நடிப்புக்களை கொண்டு காணப்படாலும் முல்லை மோடி என தனக்கான ஒரு பாணியில் காலம் காலமாக முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியினை சேர்ந்த கலைஞர்களால் நடிக்கப்பட்டு வரும் கோவலன் கண்ணகியின் வரலாற்றினை கூறி நிக்கும் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து நீண்டகாலமாக தொன்று தொட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கலுக்கு முதல் கிழமையில் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய முன்றலில் நேர்த்தி கூத்தாக கலைஞர்களால் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இந்த கலைஞர்களின் நடிப்பில் உருவான கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து கிழக்கு மாகாணத்தின் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தினால் திறந்துவைக்கப்பட்டுள்ள கலைஞர்களுக்கான ஆற்றுகை விழாவின் போது 01.08.2024 அரங்கேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Admin Avatar