நாடளாவியரீதியில் யானைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கிவைப்பு!

நாடளாவியரீதியில் யானைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கிவைப்பு-முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 இடங்களில் கணக்கெடுப்பு!
தேசிய ரீதியாக காட்டு யானைக் கணக்கெடுப்பானது 13 வருடங்களின் பின்னர் இன்று 17.08.2024 தினம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்ச்சியாக 17,18,19ம் திகதிகளில் இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாங்குளம், ஒட்டுசுட்டான்,புதுக் குடியிருப்பு,வெலிஓயா ஆகிய நான்கு பிரதான தொகுதிகளின் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பதினொரு உப பிரிவுகளின் எழுபத்திமூன்று மத்திய நிலையங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

தண்ணீர் உள்ள இடங்களில் கண்காணித்தல் என்ற முறையினைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள யாகைள் நீர் குடிக்கும் குளங்களின் கரையோர பகுதிகளை வைத்து இந்த கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளார்கள் இதற்காக மாவட்டத்தில் 155 கணிப்பாளர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர்.
இலங்கையில் இறுதியாக 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் யானை மனித மோதல் அதிகரித்த மாவட்டமாக காணப்படுகின்றது பல பிரதேசங்களில் யானைவேலிகள்அமைத்து கொடுக்கப்படாத நிலை இன்றும் தொடர்கின்றது இதனால் ஒவ்வொரு போக விவசாய செய்கையிலும் யானையால் பாரிய அழிவினை விவசாயிகள் எதிர்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Admin Avatar