முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 17.06.23 இன்று பயணம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவரது அமைச்சின் கீழான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினருடன் சந்தித்து கலந்துரையாடி சில தீர்;மானங்களை எடுத்துள்ளார்.
அந்தவகையில், வட்டுவாகல் பிரதேச கடற்றொழிலாளர்களின் மீன்பிடி இறங்கு துறைக்கு செல்வதற்கு பொருத்தமான வீதியைப் புனரமைத்து கடற்றொழிலாளர்களின் பாவனைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வட்டுவாகல் கடற்கரை வீதி இராணுவ முகாம் பகுதிக்குள் காணப்படுவதால் கடற்றொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். இதுதொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கட்டளை தளபதியுடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடிய நிலையில், வட்டுவாகல் இறங்கு துறைக்கான கடற்கரை வீதி முழுமையாக விடுவிக்கப்படும் வரையில், தற்காலிக ஏற்பாடாக பாடசாலை வீதியை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வீதியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சகிதம் சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர், பாதையை புனரமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
அத்துடன், வட்டுவாகல் சப்தகன்னி (கண்ணகி அம்மன்) ஆலயத்தின் தீர்த்தோற்சவ காலத்தில் பாரம்பரிய வழிப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற, தெய்வீகத் தன்மை வாய்ந்த வேப்ப மரப் பிரதேசம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இன்று மீண்டும் மக்கள் பாவனைக்கு முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசம் கடந்த காலங்களில் இராணுவ முகாம் வளாகத்தினுள் அமைந்திருந்த நிலையில், பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி குறித்த இடத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
அதேபோன்று, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கடலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறிப்பாக, சட்டவிரோத தொழில் முறையான வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் ஆரோக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இந்த வருடத்தில் சுமார் 38 படகுகளை கைப்பற்றி நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தியிருப்பதாக கடற்றொழில் திணைக்களத்தினர் தெரிவிக்கின்ற போதிலும் வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடிப்பதை நூற்றுக்கணக்கான மீன்பிடிப் படகுகள் தொடர்ந்தும் மேற்கொண்டுத்துவருவதாக கடற்றொழில் சங்க பிரதிநிதிகளினால் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதேபோன்று, நந்திக்கடல், நாயாறு போன்ற களப்பு பகுதிகளிலும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத தொழில் முறைகள் காரணமாக சிறுதொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இவை தொடர்பாக அவதானம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், சட்ட ஏற்பாடுகளில் காணப்படுகின்ற குறைபாடுகளும் இவ்வாறான சட்ட விரோத தொழில் முறைகள் தொடர்வதற்கு ஏதுவாக இருப்பதானால், இந்த வருட இறுதிக்குள் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வர்த்தமானியை வெளியிடுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், நாயாறு, நந்திக்கடல், சாலை போன்ற களப்பு பகுதிகளை துப்பரவு செய்வதற்கான அனுமதிகள் தேவையான திணைக்களங்களில் இருந்து கிடைத்திருப்பதனால் சுத்தப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்துமாறு கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கரைவலை தொழில் மேற்கொள்வதற்கான இடங்களை அளவீடு செய்து, அவை சரியானவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தூமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டதுடன், கரைவலைத் தொழிலில் வின்ஞ் எனப்படும் சுழலி பயன்படுத்துவதற்கு அனுதிக்கப்படுகின்ற போதிலும், வின்ஞ் பொருத்தப்பட்ட உழவு இயந்திரங்கள் ஒரு இடத்தில் நிலைத்து நின்றே செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இவ்வாறு பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்ட இன்றைய கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் திணைக்களத்தினர், கடற்படை இராணுவம் பொலிஸ் ஆகியவற்றின உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.