தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு, வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டது.திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகள் ஏறு தழுவுதல் என்ற பெயரில் நடத்தப்பட்டது.
தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக தமிழகத்தில் இருந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டியில், சுமார் 200 காளை மாடுகள் பங்கு பெற்றன.இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழு முன்னெடுத்தது
அதைத் தொடர்ந்து, திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் இந்தப் போட்டி சுமார் 30 ஆண்டுக் காலமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. சம்பூர் கிராம பகுதிக்குள் நடத்தப்பட்டு வந்த இந்தப் போட்டி தொடர்பில், வெளி பகுதிகளுக்குப் போதிய தெளிவில்லாது இருந்தது.
தமது கிராமத்திற்குள் காணப்படும் காளை மாடுகளைக் கொண்டு, இந்தப் போட்டிகளை சம்பூர் இளைஞர்கள் நடத்தி வந்துள்ளனர். எனினும், இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து, முகாம்களில் வாழ்ந்த காலத்தில் மாத்திரம் இந்தப் போட்டிகளை நடத்த முடியவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்த காலத்தின்போது இந்தப் போட்டிகள் நடைபெறவில்லை. இடம்பெயர்ந்து வாழ்ந்ததன் காரணமாக வெளி ஊர்களில் இந்த நிகழ்வுகளைச் செய்யவில்லை. எனினும், இப்போது ஏற்பாட்டுக் குழு மற்றும் மாட்டு உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும், சம்பூர் மக்களின் ஆதரவுடனும் மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றோம்,” என ஜல்லிகட்டு போட்டி ஏற்பாட்டு குழுவின் உறுப்பினரான குணராசா ராஜரூபன் தெரிவிக்கின்றார்.
இதுவரை காலம் நடத்தப்பட்ட போட்டிகளில் 50 மாடுகள் வரை பங்கு பெற்றுள்ளன. திருகோணமலையை மாவட்டத்திலுள்ள ஈச்சிலம்பற்று, சம்பூர், 6ஆம் காலனி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமது மாடுகளை போட்டிகளுக்காக அழைத்து வருகின்றனர்.
இலங்கையில் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை, மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
”பொதுவாக தமிழ் கலாசாரத்தை உலகளவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதைப் பாதுகாக்க வேண்டும். அது எல்லா தமிழர்களின் கடமை. அப்படி இருக்கும்போது ஏறு தழுவுதல் போட்டி மாட்டுப் பொங்கல் அன்று தமிழகத்திற்கானது மாத்திரம் அல்ல.
உலகில் யாராக இருந்தாலும் உணவு உட்கொண்டுதான் வாழ வேண்டும். அதற்கு மாடுகள் மிக முக்கியம். அதற்காகத்தான் மாட்டுப் பொங்கல் அன்று பொங்கல் வைத்து மாடுகளை வணங்குகிறோம்.
சோழர் காலத்தில் இலங்கையில் இந்தப் போட்டிகள் தொடர்ந்து நடந்துள்ளது. அதன் பின்னரான காலப் பகுதியில் இல்லாமல் போனது,” என்று தெரிவித்தார்