வவுனியாவில் இருவர் பொலிஸாரால் கைது!

ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் எனக் கூறி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறுப்பினர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வன்னி மாவட்டங்களுக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வவுனியாவில் இன்று (05) நடைபெற்றது.

இதன்போது காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சிலர் ஜனாதிபதியை காண்பதற்காக நகரசபை வீதியூடாக உள்நுழைய முற்பட்டுள்ளனர். அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் இரு பகுதியினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.

இதனையடுத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வீதி ஓரமாக நின்று கறுப்பு துணிகளுடன் தமது பிள்ளைகளை கோரி கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது நீதிமன்ற கட்டளையைக் காட்டி அவர்களை அங்கிருந்து பொலிஸார் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். எனினும் தாம் ஜனாதிபதியை சந்திக்க வந்துள்ளோம். அதற்கு விடுமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரியதுடன், கோசம் எழுப்பினர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய் ஒருவரும், அவர்களுடன் இணைந்து அதனை காணொளி பதிவு செய்த யுவதி ஒருவரும் என இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி சிவானந்தன் ஜெனீற்றா மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

இதனையடுத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து கண்ணீருடன் கலைந்து சென்றனர்.

Tagged in :

Admin Avatar