ஐ.நா வில் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்களை சந்தித்த ஏ.ஆர். ரகுமான்


கடந்த மாதம் 11ம் திகதி தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் சபையின் 54வது கூட்டத்தொடரின் கடைசி வாரத்திலும் உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அரசியல் பிரமுகர்கள்,பெண்கள்,இளையோர் என பல்வேறு தரப்பினரும் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமாக தொடர்ச்சியான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த வேளையில் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் தமிழ் ஆரவலருமான திரு ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் ஐ.நா வின் சிறப்பு அழைப்பாளராக இன்றைய நாள் 09.10.23 ஐ.நா விற்குள் வருகைதந்திருந்தார். அப்போது அங்கு தமிழர் உரிமை செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அச்சந்தர்ப்பத்தில் பன்னாட்டு தளங்களில் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டதுடன் அவைதொடர்பான ஆவணங்களும் திரு ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான கோரிக்கை மனுவுடன் கையளிக்கப்பட்டது.

தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலை கட்டமைப்பு ரீதியாக இன்றும் தொடர்ந்து வருகின்ற நிலையில் தங்களது தமிழ்ப்பற்றும் தமிழீழ ஆதரவும் தமிழீழ மக்களுக்கு சற்று ஆறுதலாகவும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதுமாக அமைந்திருக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அந்தவகையில் தென்சூடானுக்கு ஆதரவாக கொலிவூட் நடிகர் யோர்ச் குளூனி அவர்களினால் அமெரிக்காவில் தொடங்கிய கலைஞர்கள் ஆதரவுக்குழு உலக முழுவதுமான கலைஞர்களின் ஆதரவுக்குழுவாக உருவாக்கப்பட்டது.

யோர்ச் குளூனியின் அச்செயற்பாடுகள் தென் சூடான் நாட்டின் விடுதலைக்கு பெரும் ஆதரவு சக்தியாக இருந்தது. இதே போன்று தமிழ்நாட்டு கலைஞர்களும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு குழுவினை உருவாக்கி அனைத்துலக கலைஞர்களையும் ஒன்றுதிரட்டி தமிழின அழிப்புக்கான நீதிக்கு வலுச்சேர்க்க வேண்டுமெனதமிழர்கள் என்ற உரிமையோடு அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த பொப் மார்லே, பொனோ, மைக்கல் யக்சன் போன்ற உலக இசைப் பிரபலங்கள் வழியில் நீங்களும் எமக்கான முன்னோடியாய் தமிழ்த் திரையுலகத்தை ஒன்று திரட்டி பேரினவா சிங்கள அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்படும் எம் தமிழினத்தைக் காக்க அறிவியல் தளத்தில் எம்மோடு கை கோர்க்க வேண்டும் எனவும் ஒடுக்கப்படும் எம் குரலாய் நீங்கள் உலக அரங்கில் ஒலிக்க வேண்டுமென்று தங்களை அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என அவருடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *