6ஆவது நாள் அகழ்வு பணி இதுவரை 6 உடற்பாகங்கள் மீட்பு -கொக்குத்தொடுவாய்!


முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று (12) ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஆறாம் நாள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்து ஏழாவது நாளான இன்று 13.09.23 அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த அகழ்வாய்வின் போது ஏழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்றும் ஏழாம் நாள் தொடர்சியாக அகழ்வுபணிகள் நடைபெற்றிருந்தன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று(12) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அகழ்வு பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா இன்றையதினம் ஒரு உடற்பாகம் முழுமையாகவும் இன்னொரு உடற்பாகம் பகுதியளவில் மீட்கப்பட்டதாகவும் ஏற்கனவே மீட்கப்பட்ட ஐந்து உடற்பாகங்களுடன் ஆறு உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் துப்பாக்கி சன்னம் ஒன்றும், கழிவு நீரை சுத்திகரிக்கும் உபகரணம் ஒன்றும் தடயப்பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அகழ்வு பணியில் உடலங்களை அடையாளப்படுத்துவதில் கடினத்தன்மை காணப்படுவதாகவும் ஒன்றன் மேல் ஒன்றாக பல உடல்கள் பின்னி பிணைந்து இருப்பதாலும் இந்தநிலை தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அகழ்வு பணிகள் தொடர்ந்து இன்று ஏழாவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின்போது சேரிக்கப்படும் உடற்பாகங்கள் மற்றும் சான்று பொருட்கள் என்பன நீதிமன்ற பதிவேட்டின் பதிவு மற்றும் பொலீஸ் பதிவு,மருத்துவமனை பதிவுக்கு உட்படுத்தப்பட்டு அனைத்து பொருட்களும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அகழ்வு பணிகள் நிறைவில் இவை மேலதிக பகுப்பாய்வு நடடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளது

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *