முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் அமைக்கப்பட்ட மதுபான சாலைக்கு பொதுமக்கள் , பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபான சாலை நிலையம் ஒன்று இம்மாதம் 15ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த கிராம மக்கள் , பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலாளருக்கு அதனை அகற்றி தருமாறு கோரி கடிதம் ஒன்றினை இம்மாதம் 16ஆம் திகதி வழங்கியுள்ளார்கள்.
கடிதம் வழங்கப்பட்டு இதுவரையில் குறித்த மதுபானசாலையை அகற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் குறித்த கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மதுபானசாலை அமையப்பெறும் இடத்திற்கு 100மீற்றர் தூரத்திற்கு உட்பட்ட பகுதியில் பாடசாலைகளோ, தேவாலயங்கள், ஆலயங்கள் இருக்க கூடாது என்பது விதிமுறையாக இருக்கின்ற போதும் குறித்த இடத்திலிருக்கும் மக்களிடம் அபிப்பிராயம் கேட்கப்படவில்லை எனவும், இதனால் குறித்த கிராமத்தில் பாடசாலை அருகிலிருப்பதனால் பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் நிலையும், பாடசாலை இடைவிலகும் நிலையும் உருவாகும்என குறித்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.