தமிழர்களிடம் ஒற்றுமையின்மை ஆட்சியாளர்களின் செயற்பாட்டிற்கு இலகுவாகஇருக்கிறது!

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே நாட்டினுடைய ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடு இன்று (20.08) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. அவ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்களுடைய 200 வருட வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக ஏன் எழுத வேண்டும் என்பதனை நாங்கள் சற்று சிந்திக்க வேண்டும். புத்தகம் எழுதுவதாக இருந்தால் அதற்கொரு காரணம் வேண்டும்.

200 வருடங்களுக்கு முதல் மலையக மக்களுடைய வாழ்க்கை வரலாற்றை அவர்கள் பட்ட துன்பங்களை எமது சமுதாயம் திரும்பி பார்க்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வரலாறுகளை நாங்கள் நிச்சயம் படிக்க வேண்டும். எங்களுடைய முன்னோர்கள் பட்ட துன்பங்களை அறிந்து கொள்ள வேண்டும். அப்படி அறிந்தால் மட்டுமே நாங்கள் சரியாக வாழ முடியும். அந்தவகையில் இரா. சுப்ரமணியம் அவர்களை வாழ்த்தி நிற்கின்றேன்.

2009 ஆம் ஆண்டுக்கு முற்பாடு இந்த மண்ணில் சுதந்திரமாக சமய கலாச்சார மத, மொழி  அடிப்படையில் கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் தற்போது இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்கள் எங்களை வழிநடத்துகின்ற எங்களை துச்சமாக மதித்து ஒவ்வொரு விடயங்களையும் செய்கின்ற ஒரு சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இதற்கு பிரதானமான காரணம் வடக்கு கிழக்கு, மலையகத்தில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் இடையே இருக்கின்ற ஒற்றுமையின்மை காரணமாக தான் எங்களை இந்த நாட்டினுடைய ஆட்சியாளர்கள் இலகுவாக வழிநடத்தி தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய தலைவர் அவர்கள் வடக்கு கிழக்கு, மலையகம் என்ற மூன்றும் இணைந்த கட்டமைப்பை அவர் சிந்தனை வடிவில் செய்து அதன் அடையாளமாக மலையகத்தில் பெரியதொரு பொங்குதமிழையும் செய்திருந்தார். 

அவ்வாறு வடக்கு கிழக்கு, மலையகத்தில் பொங்குதமிழை செய்ததன் ஊடாக நாங்கள் மூன்று இடங்களிலும் ஒரே தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற அடையாளத்தை அவர் அன்று பதிவிட்டிருந்தார்.

ஆனால் இன்று அந்த மூன்று இடங்களிலும் இருக்கின்ற கட்டமைப்பு இல்லாமல் வடக்கு கிழக்கு மலையகத்திற்குள் வேறாக எல்லாம் பிரிந்து தமிழ் மக்கள், பிரதிநிதிகள் பிரிந்து நிற்கின்றார்கள். இது எங்களுடைய முன்னோர்களுக்கு சிந்தனை செயற்பாடுகளுக்கு நாங்கள் செய்கின்ற துரோகமாக தான் நான் பார்க்கின்றேன். முடிந்தளவில் எல்லோரும் ஒற்றுமையாக பயணிப்போம்  என தெரிவித்தார்.

Tagged in :

Admin Avatar