குருந்தூர்மலைக்கு வரும் கம்மன்பில –எதிர்ப்பினை வெளிப்படுத்த தமிழர்கள் தயார்!

முல்லைத்தீவில் அமைந்துள்ள குருந்தூர்மலைக்கு சிங்கள கடும்போக்குவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வருவதால் தமிழ் மக்கள் அஞ்சி ஒடுங்கமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பௌத்த மேலாதிக்கம் கொண்டவர்களாலும்,குடும் போக்கு மதவாதிகளாலும் பேசப்படும் விடையமாக குருந்தூர்மலை மாறியுள்ளது.

நீதிமன்ற கட்டளையினை மீறி கட்டிமுடிக்கப்பட்ட குருந்தூல் மலையில் அகழ்வு ஆராச்சிபணியினை அன்று தொல்பொருள் திணைக்கள அமைச்சராக இருந்த விதுரவிக்கிரமநாயக்கா இராணுவ பாதுகாப்புடன் தொடக்கிவைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மதமுறுகலை தோற்றிவிக்கும் இடமாக அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினாலும்,மதவாதிகளாலும் மாற்றம் பெற்றுள்ள குருந்தூர்மலை தமிழர்களின் மரபுவழிவந்த வழிபாட்டு பூமி என்பதை மறைத்து அங்கு பௌத்த விகாரையினை நீதிமன்ற உத்தரவினை மீறியும் கட்டி முடித்துள்ளார்கள்
பௌத்த மதத்தினை சேர்ந்தவர்கள் வாழாத இடத்தில் தமிழ்மக்களின் சொந்த காணிகளை அபகரித்து எல்லைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது விடையம் பாராளுமன்றத்தில் தமிழ்மக்களின் பிரதிநிதிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ள போது தற்போது இது தென்னிலங்கையில் மதவாத போக்கு கொண்டவர்களின் பேசுபொருளாக மாறியுள்ளது.

எவ்வாறு தையிட்டியில் விகாரையினை கட்டிமுடித்து திறந்து வைத்தார்களோ அவ்வாறே இங்கும் விகாரை கட்டப்பட்டுள்ளது இந்த செயற்பாட்டிற்கு தமிழர்கள் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் முற்றுமுழுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வந்துள்ளார்கள்.

இந்த நிலையில் எதிர்வரும் 21.06.23 புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வருவதை தமிழ்மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள் என்று தமிழ்மக்களின் பிரதிநிதிகள் பலர் தெரிவித்துள்ளார்கள்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிக்வையில் அவர் அங்கு செல்கின்றார் என்பதற்காக தமிழர்கள் எல்லாம் அடங்கியொடுங்கி அஞ்சி இருக்கமாட்டார்கள். தமிழர்களுடைய பூர்வீக நிலத்தில் சட்டபூர்வமற்ற முறையில் அமைக்கப்பட்டு இருக்கின்ற, தாதுகோபத்துக்கு நாங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டாமல் இருக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கின்ற செயற்பாட்டின் ஓர் அங்கம் இது. தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தமது வாக்குகளைப் பெருக்குவதற்கு இதனைத் துருப்புச் சீட்டாக எடுத்துள்ளார்கள்.

இவர்கள் வந்து வந்து சென்று இதனை பெரிதுபடுத்துவதற்கு நாங்களும் அமைதியாக இருக்கமுடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பில இனவாதி. இலங்கை சிங்களவருக்குரிய நாடு என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருபவர்களுள் ஒருவர்.தேர்தல்கள் இடம்பெற இருப்பதனால் சிங்கள மக்களுக்கு படம் காட்டி பௌத்தத்தை பேணிப்பாதுகாப்பது போல சோடிப்பதற்காக அவர் வருகை தரலாம்.முதலில் சரத் வீரசேகரவும் வந்து சென்றவர். அதேபோல் இவரும் இங்கே வந்து சென்று சிங்கள ஊடகங்களுக்கு ஏதும் சொல்லுவார்.இனவாதத்தை கக்கி தமது வாக்கு வங்கிகளைப் பெருக்குவதற்கே இவர்கள் வருகை தருகின்றார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பில போன்ற குழுவினர் இங்கே வந்து இனவாதத்தைக் கக்கிவிட்டு செல்வதை எங்களுடைய தமிழ்ச் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்கள் மீண்டும் மீண்டும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது எம்மினம் மீதான இன்னொரு இன அழிப்பாகவே நாம் பார்க்க வேண்டும்.சட்டவிரோத விகாரையை ஆதரிக்கவே கம்மன்பில வருகின்றார். நாங்கள் எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் சிங்கள – தமிழ் மக்களிடையே விரிசலை இன்னும் இன்னும் ஏற்படுத்துமே தவிர முரண்பாடுகளைக் குறைக்காது. இந்தச் செயற்பாடுகளைச் செய்கின்ற உதய கம்மன்பில போன்றவர்களைக் கண்டு நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை.இவ்வாறு செயற்படுவது நாட்டை இன்னும் அகலபாதாளத்துக்குள் தள்ளுமே தவிர எந்தவித அபிவிருத்தியையும் ஏற்படுத்தாது என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்

இனவாதக் கட்சியினுடைய தலைவராகக் காணப்படுகின்ற அதே தருணம் விகாரைகளுக்கு அருகாமையில் சிங்களவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கருத்துக்களைக் கொண்ட அரசியல்வாதி உதய கம்மன்பிலகுருந்தூர்மலையைச் சூழ சிங்களவர்களை மாத்திரமே குடியேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர். அவரின் வருகை குருதிக்களரியை ஏற்படுத்தும் விடயம்.

எரிகின்ற விளக்கில் எண்ணெய்யை ஊற்றுவது போல் பிரச்சினைக்குரிய விடயமாக மாறி இருக்கின்ற குருந்தூர்மலைக்கு உதய கம்மன்பில வருவதானது சிங்கள மக்களை உசுப்பேத்தி அவர்களுடைய வாக்குகளைப் பெறுவதற்கே.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் குருந்தூர்மலைக்குச் செல்லும்போது பொலிஸார் பல தடைகளை விதிக்கின்றனர்.ஆனால், தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் விசேட அனுமதி வழங்கப்படுகின்றது. அவருடைய வருகையை ஏற்க முடியாது. என ரெலோவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.நோதராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

Tagged in :

Admin Avatar