முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட மருத்துவமனையில் வைத்தியர்கள் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
மாவட்ட மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு துறைக்குமான சிறப்பு வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை தொடர்ந்து வருகின்றது முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து வவுனியா 67 கிலோமீற்றர் தொலைவிலும், கிளிநொச்சி 71 கிலோமீற்றர் தொலைவிலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 135 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மருத்துவர்கள் இல்லாத நிலையினால் இவ்வாறான நோயாளர்கள் பெரிதும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளார்கள்.
தற்போது சத்திரசிகிச்சை நிபுணர்கள் இருவரை தற்காலிகமாக நியமித்தும் அவர்களை மாற்றம் செய்யும் நடவடிக்கையில் சுகாதார அமைச்சு ஈடுபட்டு வருகின்றமையினை அறியமுடிகின்றது
அவ்வப்போது நியமிப்பதும் பின்னர் அவர்களை மாற்றம் செய்வதும் போன்ற நடவடிக்கையினால் மாவட்டத்தில் மருத்துவசேவையினை மக்கள் முழுமையாக இலகுவாக பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான இடம்மாற்றும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு சரியான சேவையினை மக்களுக்கு வழங்கக்கூடிய நிலையில் மாவட்ட மருத்துவமனை இயங்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.
இந்த நிலை தொடராமல் இருக்க ஆவணசெய்யவேண்டும் இனி வரும் காலங்களில் இவ்வாறான இடமாற்றங்கள் ஏற்படுத்தாமல் நிலையான மருத்துவ நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.
போரால் மற்றும் இயற்கை அனர்த்த்தினால் பாதிக்கப்பட்ட மிகமோசமான மாவட்டமாக காணப்படுகின்றது மத்தியஅரசாங்கத்தின் சுகாதார அமைச்சு பாராபட்சமாகவே முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையினை நடத்துகின்றமை வெளிப்படையாக காணக்கூடியதாக உள்ளது.
மக்களின் அடிப்படை தேவையான மருத்துவதேவையினைகூட நிவர்த்தி செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் முழுவதிற்குமான சத்திரசிகிச்சை நிபுணர் சேவைகளை வழங்கும் ஒரே ஒரு வைத்தியசாலை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையாகும். இந்த வைத்தியசாலையானது வெலிஓயா, பதவியா, மல்லாவி, மாங்குளம், புதுக்குடியிருப்பு என பல ஆதார வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பப்படும் அவசர நோயாளிகளுக்கான சத்திரசிகிச்சைகளை செய்துவருகிறது.
எனவே வார இறுதி நாட்கள் உட்பட முறையான சேவைகளை வழங்க 2 அறுவை சிகிச்சை நிபுணர்கள் கட்டாயம் தேவையானநிலை காணப்படுகின்றது
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கடந்த காலத்திலோ அல்லது தற்காலத்திலோ நிரந்தர வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்படவில்லை அவ்வப்போது நியமிப்பதும் அவர்களை பின்னர் மாற்றம் செய்வதுமாக மத்திய அமைச்சு ஈடுபட்டுவருகின்றது
இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் சம்மந்தப்பட்ட அமைச்சுக்கு எடுத்துரைத்து ஒரு நிலையான வைத்திய நிபுணர்களை நியமிக்க ஆவண செய்யவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் வடக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் இருக்கின்றார்கள் அவர்களும் இந்த விடையத்தில் கரிசனை எடுத்து செய்யவேண்டும் இவ்வாறான போக்கு தொடர்ந்துகொண்டுசென்றால் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டம் பாதிப்பிற்கு உள்ளாகின்ற மாவட்டமாகவே காணப்படும் இது தொடர்பில் அக்கறைகொண்ட மக்கள் பிரதிநிதிகள் அமைச்சுக்களுடன் பேசி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள இவ்வாறான மருத்துவர்கள் பிரச்சினையினை இலகுவாக சீர்செய்யவேண்டும்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு பௌதீக வளப்பற்றாக்குறைகள் கடந்த காலங்களில் காணப்பட்டாலும் பல தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள்,சில நாடுகளின் தூதரங்கள் ஊடாக மருத்துவமனையின் பௌதீக வளங்கள் கட்டிவளர்கப்பட்டுள்ளன.
ஊதாரணமாக சிறுநீரகநோயாளர்களுக்கான குருதிமாற்று சிகிச்சை நிலையம் அதற்கான இயந்திரங்கள்,ஒட்சிசன் ஆலை, சத்திரசிகிச்சை நிலையத்திற்கு தேவையான இயந்திரங்கள் என பல மில்லியன் பெறுமதியான மருத்துவ பரிசோதனை பொருட்களை தற்போது பெற்றுக்கொண்டாலும் மருத்துவ நிபுணர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்படும் நிலை தொடர்ச்சியாக காணப்படுகின்றது.
இதனை விட வறிய மக்களின் உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களின் உடலங்களை கொண்டு செல்வதற்காக வி.பி.பவுண்டேசன் எனப்படும் தொண்டு நிறுவனம் மருத்துவமனையுடன் இணைந்து செயற்பட்டு வருவதுடன் மற்றும் ஒரு புலம்பெயர் அமைப்பு தொண்டு நிறுவனமும் செயற்பட்டு கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் வறிய மக்களாகவே முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தொடர்ச்சியாக காணப்பட்டாலும் சரியனா மருத்துவசேவையினை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆவண செய்யவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்