Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News யாழ்ப்பாணம்

பொலீசாரின் மோட்டார்சைக்கிலில் கஞ்சா கடத்தல் கடத்தியவரும் கைது பொலீசும் கைது!

கஞ்சா கடத்தலுக்கு தனது மோட்டார் சைக்கிளை வழங்கிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை மூன்று நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் அனுமதியும் பெற்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பொலிஸாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளார்.

அதனை அடுத்து மோட்டார் சைக்கிளை மீட்ட பொலிஸார் ,அதனை சோதனையிட்ட போது பொதி ஒன்றில் 16 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் காணப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்ற நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , தனது வீட்டிற்கு அருகில் உள்ள பற்றைக்காட்டில் குறித்த கஞ்சா பொதி மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் , யார் அதனை மறைத்து வைத்தது என தெரியாது எனவும் , அதனை தான் இடம் மாற்ற முற்பட்ட வேளையிலையே பொலிஸாரை கண்டதும் கைவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை அவரது வங்கி கணக்கினை பொலிஸார் சோதனையிட்ட போது , பெரும் தொகை பண பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதை அறிந்து கொண்டனர்.

அதனை அடுத்து நீதிமன்றில் அந்நபரை முற்படுத்தியதை அடுத்து , மன்றின் உத்தரவில் அவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை குறித்த நபர் கைவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த , மன்னாரில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருடையது என பொலிஸார் கண்டறிந்தனர்.

அதனை அடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி மூன்று நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.

அதன் பிரகாரம் பொலிஸ் உத்தியோகஸ்தரை பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் .

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *