Tuesday, January 27, 2026
HomeMULLAITIVUPSTA சட்டவரைபு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட சமூக மட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்!

PSTA சட்டவரைபு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட சமூக மட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்!

அரசின் புதிய சட்டவரைபு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட சமூக மட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்!

இலங்கை அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள தேசிய ரீதியான பயங்கரவாத பாதுகாப்புச் சட்டம் (Protection of the State from Terrorism Act – PSTA)  என்ற சட்ட வரைவு, தற்போது பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நிலையில் உள்ளது. இதற்கான மக்கள் கருத்து கேட்கும் கால அவகாசம் 2026 பெப்ரவரி 28ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்ட வரைவு, இதுவரை கடுமையான விமர்சனங்களுக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியிருந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்  (PTA)-ஐ நீக்கி அதற்குப் பதிலாக கொண்டு வரப்படவுள்ளதாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய (PSTA)  சட்டமும் ஜனநாயக, மனித உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரங்களைப் பாதிக்கக்கூடிய பல அம்சங்களை கொண்டுள்ளதாக சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் மத்தியில் தீவிர கவலைகள் எழுந்து வருகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில், PSTA சட்ட வரைவு தொடர்பான தெளிவான புரிதலை சமூக மட்டத்தில் உருவாக்குவதற்கும், மக்களின் கருத்துகள், கவலைகள் மற்றும் பரிந்துரைகளைத் தொகுப்பதற்குமான நோக்குடன் சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

27.01.2026 அன்று முல்லைத்தீவில் உள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் டி.கனகராஜ் அவர்கள் வளவாளராக பங்கேற்றுள்ளார்

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த
உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்,சிவில் சமூக அமைப்புகள்,சமூக அடிப்படையிலான அமைப்புகள்,பெண்கள் குழுக்கள்,விவசாய மற்றும் மீனவர் அமைப்புகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,சமூகமட்ட இளைஞர் குழுக்கள்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்

கலந்துரையாடலின் இறுதியில், பங்கேற்ற அனைவரின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1. PSTA சட்ட வரைவு மக்களுக்கு எந்த வகையிலும் பயன் அளிக்காததால், அது முழுமையாக திரும்பப் பெறப்பட வேண்டும்.
2. இந்தச் சட்டம் தொடர்பான பொது விளக்கம் போதுமான அளவில் செய்யப்படவில்லை; அதற்காக குறைந்தபட்சம் மேலதிக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
3. சிவில் சமூக அமைப்புகள், சட்டப் பிழைகள் மற்றும் மனித உரிமை பாதிப்புகளை ஆதாரங்களுடன் அரசுக்கு முன்வைக்க வேண்டும்.
4. இதுவரை நடைமுறையில் இருந்த பயங்கரவாத சட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சம்பவங்கள் தொகுக்கப்பட்டு, ஒரு விரிவான அறிக்கையாக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
5. சமூக ஊடகப் பயன்பாட்டின் காரணமாக இளைய தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
6. ஜனநாயக விரோத சட்டங்களுக்கு எதிராக மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
7. எந்தவொரு சட்ட வரைவும் முன்வைக்கப்படும் போது, அதன் தேவை, அவசியம் மற்றும் நோக்கம் குறித்து மக்களுக்கு தெளிவாக விளக்குவது அரசின் பொறுப்பு என வலியுறுத்தப்பட்டது.


8. இவ்விவகாரம் தொடர்பாக ஊடக அறிக்கை வெளியிடவும், 2026 பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலதிக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.


9. பெறப்படும் கருத்துகள் மற்றும் தீர்மானங்கள் அரசுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டு, இந்தச் சட்டத்தை தவிர்ப்பதற்கான அழுத்தம் வழங்கப்பட வேண்டும்

இந்தக் கலந்துரையாடல், PSTA சட்ட வரைவு தொடர்பாக மக்களின் கவலைகள், எதிர்ப்புகள் மற்றும் ஜனநாயகப் பார்வைகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய களமாக அமைந்துள்ளது எதிர்வரும் காலப்பகுதியில், சிவில் சமூக அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகள், ஆவணங்கள் சேகரிப்பு மற்றும் ஜனநாயகப் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்பதே இந்தக் கலந்துரையாடலின் மையப் புள்ளியாக அமைந்தது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments