தற்போது இடம்பெற்றுவரும் அசாதாரண காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் இயல்புநிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக 1495 குடும்பங்களை சேர்ந்த 4644பேரின் இயல்பு நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று (27) மாலை தற்போதைய நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இதில் 530 குடும்பங்களை சேர்ந்த 1583 உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 9 இடைத்தங்கல் முகாம்களில் 218 குடும்பங்களை சேர்ந்த 686 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகள் பிரதேசசெயலாளர் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
கனத்த மழை , காற்று காரணமாக இதுவரை மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 24 வீடுகள் பாதிப்படைந்து இருக்கின்றது. அத்தோடு 7 தொழில் முயற்சிகள் பாதிப்படைந்திருக்கின்றது.
விவசாயம், கால்நடை தொடர்பான பாதிப்புக்களின் விபரங்கள் சேகரித்து கொண்டிருக்கின்றோம்.
கன மழை காரணமாக 3 பெரிய குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. முத்தையங்கட்டு குளத்தின் கொள்ளளவு 24 ஆக இருக்கின்றது. அதில் தற்போது 21 அடி நீர் பாய்கின்றது. தண்ணிமுறிப்பு குளத்தின் கொள்ளவு 21அடியாக இருக்கும் வேளை தற்போது 21அடிக்கு மேற்பட்ட நிலையிலையே இருக்கின்றது. வவுனிக்குளம் 26அடி கொள்ளவுடையது அது தற்போது 28அடி 7 அங்குலம் என்ற நிலையில் நீர் வான் பாய்கின்றது.
இக் குளங்களை அண்மித்து இருக்கும் மக்களை நாம் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி பணித்திருக்கின்றோம். முத்தையங்கட்டு குளத்தை அண்டிய பகுதிகளில் இருப்போரை படையினரின் உதவவியோடு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பியிருக்கின்றோம். பாதிப்படைந்த மக்களுக்கு அரச உதவிகள், தன்னார்வ தொண்டர் நிறுவனங்களின் உதவிகள் பெறப்பட்டுள்ளது.