வட்டுவாகல் பாலத்தினூடாக போக்குவரத்து தடையை மீறி சென்ற நபரின் மோட்டார் சைக்கிள் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி CT 100 ரக மோட்டார் சைக்கிளில் சென்றவரின் மோட்டார் சைக்கிள் வட்டுவாகல் பாலத்தை கடக்க முற்பட்டபோது வெள்ள நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளது.
பாலத்தினுடாக செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என கடற்படையினர் கூறிய போதும் அதனை பொருட்படுத்தாது குறித்த நபர் சென்று வட்டுவாகல் பாலத்தினை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது குறித்த பாலத்தினை மேவி நீர்வரத்து அதிகமாக காணப்பட்டதால் மோட்டார் சைக்கிளை இழுத்து சென்றுள்ளது. அப்போது குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தண்ணீருக்குள் விழுந்ததால் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். இருப்பினும் மோட்டார் சைக்கிளினை வெள்ளம் இழுத்து சென்றுள்ளது.
வட்டுவாகல் பாலத்தின் போக்குவரத்து தற்காலிகமாக பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.