மாட்டினை திருடிய சிவில்பாதுகாப்பு திணைக்களத்தினர் இருவர் உள்ளிட்ட மூவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பகுதியில் நீண்ட நாட்களாக மக்களின் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட பசுமடுகளை திருடி இறச்சிக்காக விற்பனை செய்துவந்த கும்பல் ஒன்றினை புதுக்குடியிருப்பு பொலீசார் 19.10.2024 அன்று கைது செய்துள்ளார்கள்.

உடையார்கட்டு குரவில் பகுதியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக மக்களின் கால்நடைகள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் கால்நடை உரிமையாளர்களினால் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்தி இருபதாயிரம் ரூபா பெறுதியான மாட்டினை திருடி இறைச்சிக்காக விற்பனைக்கு தயாரான நிலையில் மூவரை கைதுசெய்துள்ளார்கள்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரில் இருவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கத்தின் உத்தியோகத்தர்கள் இவர்கள் உடையார் கட்டு வடக்கினை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது

 பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் அரச சம்பளத்தினை பெற்றுக்கொண்டு இவ்வாறு சமூகத்திற்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் 19.10.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை 22.10.2024 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Admin Avatar