மயில்வாகனம் நிமலராஜன் – நீதியின்றி 24 வருடங்கள்!

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் – நீதியின்றி 24 வருடங்கள்

தமிழ் ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 24 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனாலும், நீதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது. அவரது படுகொலை, இன்னும் பல படுகொலைகளுடன் சேர்ந்து, தீர்க்கப்படாமல் உள்ளமை, இலங்கையில் தொடரும் தண்டனையின்மை கலாச்சாரத்தை நிலைநிறுத்துகிறது; இது குற்றவாளிகள் பின்விளைவுகளுக்கு பயப்படாமல் செயல்பட அனுமதிக்கிறது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் புதிய அரசாங்கம், ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் கொலை செய்யப்பட்டமை உட்பட பல உயர்மட்ட வழக்குகளை மீள ஆரம்பிப்பதாக அறிவித்துள்ள போதிலும், வெளிப்படையான முன்னேற்றம் இன்னும் காணப்படவில்லை. ‘தாரகி’ சிவராமின் படுகொலைக்கு நீதி கிடைக்காமல் நீண்ட காலம் கடந்துவிட்ட நிலையில், பெரும்பான்மையான தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக குறைந்தது 44 ஊடகவியலாளர்களின் கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தாததன் நியாயத்தை புதிய நிர்வாகம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள், உளவுத்துறை மற்றும் இராணுவம் உட்பட அரச பாதுகாப்பு இயந்திரங்களால் துன்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர் – இந்நிலை அச்சத்தின் சூழலை மேலும் ஆழமாக்கி அவர்களின் பேச்சு சுதந்திரத்தை மௌனமாக்குகின்றது.

நாங்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதைக் கண்டிப்பதோடு, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் மற்றும் குறிவைப்பவர்களுக்கு தைரியம் அளிக்கும் இந்த தண்டனையின்மைக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களில் ஒன்றான ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்; மேலும் உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பே முதன்மையாக இருக்க வேண்டும், அவர்களை ஆபத்துக்கு உட்படுத்துவதல்ல.

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் மற்றும் தண்டனையிலிருந்து விடுபடுவதை தீவிரமாக ஊக்குவிக்கும் ஆழமாக வேரூன்றிய கட்டமைப்புகள் சீர்திருத்தப்படாத வரை, படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளரின் விசாரணை ஊடக சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்காது.

நிமலராஜனுக்கான நீதி என்பது ஒரு வழக்கைத் தீர்ப்பது மட்டுமல்ல; வன்முறை மற்றும் பயம் தடையின்றி நீடிக்க உதவும் கட்டமைப்பை அகற்றுவது பற்றியது. எனவே, இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறவும் மற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான உடனடி நடவடிக்கையாக, சர்வதேச ஊடக கண்காணிப்பாளர்கள், விசாரணையாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் பங்களிப்புடன் நீதித்துறை அதிகாரம் பெற்ற விசாரணையை நாங்கள் கோருகிறோம்.

Admin Avatar