Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா

வன்முறைகள் பரிசளித்த மக்களின் வாழ்க்கை கதையுடன்-சண்முகம் தவசீலன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்துவரும் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் நீண்டகாலமாக ஊடகவியலாளராக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஊடக பணியினை மேற்கொண்டு வருகின்றார் இவரின் ஊடக பணியின் வெளிப்பாடாக இந்த ஆய்வு வெளியிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களின் ஒவ்வொரு செய்தி அறிக்கை ஆய்வு அறிக்கைகளின் பின்னால் நீண்ட கதைகள் வரலாறுகள் உள்ளன அந்தவகையில்தான் இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் உய்த்தாராய்ந்து ஆய்வு அறிக்கையினை தயாரித்துள்ளார் சண்முகம் தவசீலன் அவரின் ஆய்வு அறிக்கையினை முழுமையாக வாசித்து அறிந்து கொள்ளுங்கள்… எங்கள் சமூகங்களில் இவ்வாறான மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்

‘நான்கு வருடங்களுக்கு மேலாக என்னுடைய மகனுடைய மரண சான்றிதழை கூட பெற முடியாத நிலையில் நானும் எனது குடும்பமும் அனாதரவான  நிலையில் வாழ்கின்றோம். வாழ்க்கையே முடிந்து விட்டது. இனி வாழ எதுவுமில்லை. சொத்து சுகமும் அழிந்து  விட்டது. மனைவிக்கும் இரண்டு காதும் கேட்பதில்லை. அதுக்குரிய கூலியை இறைவன் தான் குடுக்கணும் இதுக்குப் பிறகும் இப்படியான சம்பவங்கள்  ஒருபோதும் நடக்கக் கூடாது’ என்கிறார் றகீம் சம்சுதீன்.

கண்டி திகன பகுதியில் 2018 மார்ச் 7 ஆம் திகதி இடம்பெற்ற திகன கலவரத்தில் தனது மகனான சம்சுதீன்  அப்துல் வாசித் என்பவரை இழந்த தந்தையே றகீம் சம்சுதீன். சம்சுதீனின் மகன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டு இவ் ஆண்டுடன் நான்கு வருடங்கள் உருண்டோடிவிட்டன.

(திகன பகுதியில் இடம்பெற்ற முஸ்லீம்-சிங்கள கலவரத்தின்போது உயிருடன் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டவரின் தந்தை றகீம் சம்சுதீன்)

பல்லினமும் இணைந்து வாழும் இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னர் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளால் உருவாக்கப்பட்ட வலுவிழந்த மக்களின் கதையே இது. இலங்கையில் மனித மோதல்களினால் ஏற்பட்ட நேரடியான பாதிப்புக்கான சம்பவங்களின் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக இவற்றைக் கூறலாம்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்றிருந்த பல வன்முறைச்சம்பவங்கள் பொருட் சேதம், உயிரிழப்பு என எண்ணிலடங்காதா பாதிப்புக்களை ஏற்படுத்தி ஓய்ந்தது. இவை மத ரீதியான காரணங்களாலும், இன ரீதியான முரண்பாடுகளாலும், திட்டமிடப்பட்ட அரசியல் காரணங்களாலும் இடம்பெற்றமையே ஆதாரபூர்வமானதாகும்.

1956 ம் ஆண்டு முதல் படிப்படியாக 1958 கலவரம்,1977 கலவரம், 1981 யாழ் நூலகம் எரிப்பு, 1983 யூலை கலவரம் , 1997 களுத்துறை சம்பவம் அதனைத் தொடந்து  30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் என நீண்ட வன்முறைகள் வரிசையில் 2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த உள்நாட்டு யுத்ததுக்கு பின்னரும் அளுத்கம, திகன சம்பவங்கள், ஏப்ரல் குண்டுத் தாக்குதல் , அறகலய என நீண்டு செல்லும் மனித மோதல்களினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் வன்முறையால் பெண் தலைமை தாங்கும் குடும்பமாக மாற்றப்பட்டவர்கள் ஏராளம். அவர்களின் தற்போதைய நிலை இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

இவ்வாறான மனித கலவரங்களால்  நேரடியாக பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் இன்று வரை அவ்வாறான துயரங்களில் இருந்து மீளமுடியாத நிலையில் வாழ்ந்து வருவதுடன் அவர்களது குடும்பங்களும் உரிய நெறிப்படுத்தல்களும் தலைமத்துவமும் இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

(தனது கணவனை இழந்த ஒரு குடும்பத்தின் சமயலறை)

மனிதனால் உருவாக்கப்பட்ட வன்முறைகளால் பெண் தலைமைக் குடும்பங்களாக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றம் என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டு கால யுத்தத்தின் காரணமாக அதிகளவான தமிழ் மற்றும் முஸ்லிம் பெண் தலைமைக் குடும்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோன்று யுத்தத்தில் உயிரிழந்த இராணுவத்தினருடைய குடும்பங்களும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களாக்கப்பட்டுள்ளனர். ஒருசேர நோக்கின், நாடு முழுவதும் யுத்தத்தினால் பெண் தலைமைக்குடும்பங்களாக்கப்பட்டவர்கள் அனேகமானோர்.

யுத்தத்தின்போது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களால் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனத்தை உள்ளடக்கிய பல பெண்களும் பெண் தலைமைக்குடும்பங்களாக்கப்பட்டுள்ளனர்.

(மட்டக்களப்பு மாவட்டத்தில் கணவன் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தனது குடும்பத்துக்கு உணவு தயாரிக்கும் கேமலதா)

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேத்தாளை  கிராம அலுவலர் பிரிவில் வசிக்கின்ற நாகராசா கேமலதா  என்பவர் கணவன் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தன்னுடைய உயர்தரம் படிக்கின்ற பிள்ளையையும் வைத்துக்கொண்டு தனது வாழ்வை கொண்டு நடத்த முடியாத  நிலையில் சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து  வருகின்றார்

நாட்டில்  தற்போது  நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி தன்னையும் விட்டு வைக்கவில்லை  என தெரிவிக்கும் அவர் நாளாந்தம் தன்னுடைய  பிள்ளையினுடைய கல்விச் செலவுகளை கூட ஈடு செய்ய முடியாத நிலைமையில் திண்டாடுவதாகவும் இருப்பினும் தன்னுடைய சொந்த முயற்சியாக தனக்குத் தெரிந்த தையல் தொழிலை செய்வதன் ஊடாக தனது பிள்ளையை முடிந்தவரை கல்வி கற்பித்து வருவதாகவும் தெரிவிக்கின்றார். 

(மட்டக்களப்பில் கணவன் கடத்திக் காணாமலாக்கப்பட்ட பின்னர் தனது சொந்த முயற்சியில் உழைத்து வாழ நினைக்கும் கேமலதா தையல் தொழிலில் ஈடுபடும்போது)

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த அளவிலே 2021.12.31 அன்று மாவட்ட செயலக தகவல்களின் படி  14 பிரதேச செயலாளர் பிரிவுகளில்  345 கிராம சேவையாளர் பிரிவுகளில்  34,155  பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள் இவர்களில் கணவனை பிரிந்து வாழ்கின்ற அல்லது விவாகரத்து பெற்று வாழ்கின்ற 6657 குடும்பங்களும் இஇயற்கையாக கணவன் மரணமடைந்த 21764 குடும்பங்களும், யுத்தம் காரணமாக கணவனை இழந்த 3210 குடும்பங்களும் விபத்து காரணமாக கணவனை இழந்த 760 குடும்பங்களும்,  கணவன் கொலை செய்யப்பட்ட நிலையில் 27 குடும்பங்களும் இவர்களுள் அடங்குகின்றார்கள்.


இவ்வாறாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 34155 குடும்பங்களிலே கேமலதாவின் குடும்பமும் ஒன்றாகும் கேமலதாவை போன்றே மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று  தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி  கிராம அலுவலர் பிரிவிலே 2006.04.17 ஆம் திகதி இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு தன்னுடைய கணவனை இழந்த நிலையில் தன்னுடைய பிள்ளைகளை வளர்ப்பதற்காக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் போராடி வருகின்றார் லோகேஸ்வரன் வசந்தகுமாரி.

(2006.04.17 ஆம் திகதி இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு தன்னுடைய கணவனின் புகைப்படம் அருகே லோகேஸ்வரன் வசந்தகுமாரி)

வசந்தகுமாரி கடந்த 2006 ஆம் ஆண்டு தன்னுடைய கணவனை இழந்த நிலையில் தன்னுடைய பிள்ளையை வளர்ப்பதற்காக மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு வீட்டுப்பணிப் பெண்ணாகச் சென்று திரும்பியவர். அங்கும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட அவர் அதற்கு மத்தியில் தொழில் புரிந்து தன்னுடைய பிள்ளையைத் திருமணம் செய்து வைத்தபின் தற்போது தனது தாயையும் பராமரித்து, உணவு தயாரித்து விற்பனை செய்கின்ற ஒரு முயற்சியாளர். நாடு முழுவதிலும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது மீளெழுச்சிக்காக, தம்மை நம்பியிருக்கும் தங்கிவாழ்வோருக்காக பல சொல்லொணாத் துன்பங்களுடன் நாட்களை நகர்த்துகிறார்கள்.

(புஷ்பா குமாரி ரம்புக்பொத அவர்களது வீடு)யுத்தத்தினால் 2008ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்த தன்னுடைய கணவர் உயிரிழந்த பின்னர் 3 பிள்ளைகளுடன் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் கண்டியில் வசித்து வருகிறார் புஷ்பா குமாரி ரம்புக்பொத. குண்டசாலை பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட பகுதியிலே வசிக்கின்ற இவர் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தனது 3 பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கே பெரும் இன்னல்களை எதிர்கொள்கிறார்.

‘கணவன் இராணுவ வீரராக இருந்து உயிரிழந்த நிலையில் அவருக்கான ஓய்வூதியம் கிடைக்கின்ற போதும் அந்த ஓய்வூதியத்தைக் கொண்டு என்னுடைய பிள்ளைகளின் கல்வியையே கொண்டு நடத்த முடியாமல் இருக்கிறது’ எனத்தெரிவிக்கும் புஷ்பா குமாரி ரம்புக்பொத, சமகாலப் பொருளாதார நெருக்கடி தன்னை பாதித்திருப்பதாகவும் கவலை வெளியிடுகிறார். 

(2008 ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து கணவர் உயிரிழந்த புஷ்பா குமாரி  ரம்புக்பொத அவர்களது குடும்பம்)

யுத்தத்தின் தாக்கத்தால் கணவன்மார்களை இழந்து பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக்கப்பட்வர்களில் வடக்கு, கிழக்கில் வேறு நிலையும், தெற்கில் வேறு நிலையும்தான் காணப்படுகிறது. ஒப்பீட்டளவில் உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுவரும் நிலையில், வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எந்த நிதி உதவிகளும் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதில்லை. இதுவே இப்போதுவரை நாட்டில் ஒரே பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தவர்கள் வெவ் வேறு விளைவுகளை அனுபவிப்பதை எடுத்துக்காட்டுகிறது.

 
முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தளவிலே கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 2120 குடும்பங்களும் புதுக்குடியிருப்பு  பிரதேச செயலாளர் பிரிவில் 2110 குடும்பங்களும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 1351 குடும்பங்களும் துணுக்காய்  பிரதேச செயலாளர் பிரிவில் 820 குடும்பங்களும் மாந்தை கிழக்கு  பிரதேச செயலாளர் பிரிவில் 447 குடும்பங்களும் வெலிஓயா  பிரதேச செயலாளர் பிரிவில் 596 குடும்பங்களுமாக  7744  பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் சிலாவத்தை கிராமத்தை சேர்ந்த செல்வமலரும் ஒருவராவார்.

(கணவன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்திருந்த நிலையில் தனது குடும்ப வாழ்வாதாத்துக்காக தையல் தொழிலில் ஈடுபடும் செல்வமலர்)தன்னுடைய கணவன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்துள்ள நிலையிலே தனது மகளுடன் தனது குடும்பத்தை கொண்டு நடத்துவதற்காக தையல் தொழிலை தனது வாழ்வாதார தொழிலாக கொண்டு தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் அவர்.

‘தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்த தையல் தொழில் எமது குடும்பத்துக்கான முழுமையான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை. ஓ.எல் படிக்கும் எனது மகளின் கல்வி நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ய பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறேன். வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்றால் சமூகத்திற்குப் பொருத்தமில்லாத பெயர்களை வைத்துவிடுவார்கள் என்றே நான் வெளியில் வேலைக்குச் செல்வதில்லை. நல்ல நிகழ்வுகளில் கூடப்பங்கேற்பதில்லை’ என்கிறார் செல்வமலர்.

கணவனை இழந்த பெண்கள் பொருளாதார ரீதியாக ஒருபுறம் இன்னல்களை எதிர்கொண்டாலும், மறுபுறம் சமூகக் கட்டமைப்புக்களால் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர். தமது பிள்ளைகளை வளர்ப்பதற்கே சிரமங்களை எதிர்கொள்ளும் அவர்கள், மாற்றுவழிக்காக கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது. அதிலும் எந்தவித ஓய்வூதியங்களின்றியும், ஏனைய சலுகைகள் இன்றியும் அரசினால் பொதுவாக வழங்கப்படும் சிறு உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிலவேளைகளில் அரச அதிகாரிகளின் பாலியல் இச்சைகளுக்கே பலியாகவேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களை வாட்டிவதைக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதலானது மேலும் பல குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாக மாற்றப்படவும், இன்னும் பல குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மாற்றுத்திறனாளிகளாக்கப்படவும் காரணமாக அமைந்தது. 

(ஈஸ்டர் தாக்குதல் காரணமாக சேதமாக்கப்பட்டு இன்றுவரை புனர்நிர்மாணம் நிறைவடையாத மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்)

இந்த திட்டமிடப்பட்ட வெடிப்பு சம்பவத்தின் காரணமாக கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்,  நீர் கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம், மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டிருந்தனர். 

(ஈஸ்டர் தாக்குதல் காணமாக சேதமாக்கப்பட்டு புனர்நிர்மாணம் நிறைவடைந்த கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்)

தன்னுடைய கணவரையும் தன்னுடைய ஒரு மகனையும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலில் பறிகொடுத்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லடி வேலூர் கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்ற சசிகுமார் சந்திரிகா தன்னுடைய சோக கதையை இவ்வாறு தெரிவித்தார்.

‘எனது மகளைக் கற்பிப்பதே எனது ஒரே கொள்கை. அதற்காக நான் உணவு சமைத்து விற்பனை செய்து வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றேன். எனது மகளைக் கற்பிப்பது என்பது பாரிய சவாலாக இருக்கிறது. தொடர்ச்சியான இந்த வன்முறை சம்பவங்களுக்கு இன்று வரை நீதி நிலை நாட்டப்படாதது மாத்திரமன்றி அதில் பாதிக்கப்பட்ட எங்களுக்கான வசதி வாய்ப்புகள் கூட இன்று வரை எமக்கு சரியாக ஏற்படுத்தித் தரப்படவில்லை. நாங்கள் இறைவழிபாட்டை செய்யக்கூட இன்றுவரை எங்களது ஆலயத்தை கூட சரிவர புனரமைக்கவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தான் வாழ்வது எவ்வாறு என்பது தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். மாற்று ஏற்பாடுகள் எதுவும் இல்லை’ என்றும் அவர் தெரிவிக்கின்றார். 

(ஈஸ்டர் தாக்குதலின்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கணவனை இழந்த சந்திரிக்கா குடும்பம்)

இவ்வாறு பல்வேறு காணங்களால் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களாக ஆக்கப்பட்ட  பெண்களுக்கு சட்டமும் துன்பத்தையே பரிசளிக்கிறது.

 
‘தேசவழமைச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக இந்த சட்டத்தின் கீழ் பெண்கள் சொத்துக்களை விற்பனை செய்வது கொள்வனவு செய்வதென்பது சிரமமாக காணப்படுகின்றது அதே நேரம் பெண்கள் கடன்களை பெறும்போதுகூட கணவனின் கையொப்பத்தின் தேவைப்பாடும் உள்ளது. இவ்வாறான நிலையில் கணவனை இழந்த பெண்களுக்கும், கணவன் காணாமலாக்கப்பட்ட கணவர்களைத் தேடும் பெண்களுக்கும் இவை சிரமமாக உள்ளன’ என்கிறார் முல்லைத்தீவைச் சேர்ந்த சட்டத்தரணி வி.எஸ்.எஸ் தனஞ்சயன்.

(சட்டத்தரணி வி எஸ் எஸ் தனஞ்சயன்)

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பெரும்பாலும் நலிவடைந்த குடும்பங்களாக காணப்படுகின்றமையால் அவர்கள் வன்முறை மற்றும் குற்ற செயல்களினால் பாதிப்புக்களுக்கு உள்ளாவதாகத் தெரிவிக்கும் அவர், பெண் தலைமத்துவ குடும்பங்களுக்கு பௌதீக ரீதியான பாதுகாப்பு இன்மையால் அதிகளவு துஸ்பிரயோகம் உட்பட பல தரப்பட்ட விடயங்களால் இவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வலுப்படுத்த அரசாங்கம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது என விளக்கிய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்

 ‘பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக உலர் உணவு பொருட்கள் வழங்கல், சமுர்த்தி கொடுப்பனவு வழங்கல், சுயதொழில் ஊக்குவிப்புக்கு  உதவுதல் உட்பட பிரதேச மகளீர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஊடாக பல்வேறுபட்ட பெண்களையும் அதேநேரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களையும் வலுப்படுத்தும் செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்களையும் இணைத்து சிறு கைத்தொழில் மற்றும் தோட்ட செய்கைக்கான உதவி முன்னெடுப்புக்கள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குகிறோம். 

விசேடமாக  எமது மாவட்ட  செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்களிலும் இந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமையளிக்கிறோம்’ தெரிவிக்கின்றார்.

(முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்)

பெண் தலைமை தாங்கும் குடும்பங்களை பொறுத்தளவிலே போசாக்கான உணவைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் எதிர்கால தலைவர்களாக உள்ள அவர்களது பிள்ளைகளின் கல்வி என பல்வேறு தேவைகளுடன் துன்பப்படுகிறார்கள்.  இவர்களுக்கான பல்வேறு வாழ்வாதார செயற்றிட்டங்களை முன்னெடுப்பதாக வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலர் நடராசா தசரதன் தெரிவிக்கின்றார்.

(வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலர்)

‘விசேடமாக புலம்பெயந்து வாழும் உறவுகளின் நிதி உதவியில் இங்குள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பலவற்றின் வாழ்வாதாரத்துக்கான சுயதொழில் முயற்சிகளுக்காகவும், அவர்களது பிள்ளைகளின் கல்விக்காகவும் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்துள்ளோம். இவ்வாறான பின்னணியிலும் நுண்நிதி நிறுவனங்களில் கடன்களை பெற்றவர்கள் உள்ளிட்ட பல்வேறு குடும்பங்கள் இன்னும் வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்த மிகவும் சிரமப்படுகிறார்கள்.  தற்போது அவ்வாறானவர்களின் விபரங்களை சேகரித்து வருகிறோம். இவர்களுக்கான விசேட திட்டங்களை முன்னெடுக்கவுள்ள எண்ணியுள்ளோம்’ என்றும் இவர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு பல வன்முறைச் சம்பவங்களாலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை முன்னோக்கிக் கொண்டுசெல்ல அவர்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதேவேளையில் தமது குடும்பத்தை துயரங்களுக்கு மத்தியிலும், மன அழுத்தங்களுக்கு மத்தியில் கொண்டு நடத்துகின்ற இந்த குடும்பங்களுக்கான உள, நல சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டியதும் அவசியமாகிறது.

சுயநல காரணங்களாலும், அரசியல் பின்னணிகளாலும் தூண்டிவிடப்பட்டு மேற்கொள்ளப்படும் இவ்வாறான மனித மோதல் சம்பவங்களுக்கான சூத்திரதாரிகள் கண்டறியப்படாத நிலைமைகளும், அவர்கள் தண்டிக்கப்படாத நிலையுமே மறுபுறம் காணப்படுகின்றது. இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்டு தங்களது குடும்பத்தையும், உறவினர்களையும், பிள்ளைகளையும், கணவர்களையும் இழந்து நீதிக்காய் காத்திருக்கும் குடும்பங்கள் நீதியும் கிடைக்காமல், உரிய நிவாரணமும் கிடைக்காமல் வீதிகளிலும், ஆணைக்குழுக்களுக்கு முன்பாகவும் ஆண்டுதோறும் சாட்சியம் வழங்கும் வெறும் சாட்சிகளாகவே நோக்கப்படுகின்றனர்.

மரணங்கள் மாற்றியமைக்க முடியாதவை. ஆயினும் இலங்கையின் பன்மைத்துவ சமூகத்தை சீர்குலைக்கும் இவ்வாறான திட்டமிட்ட மனித மோதல்களைத் தடுப்பதற்கான சட்டரீதியான வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டியதே சாலச் சிறந்தாகும். அதேநேரம் இவ்வாறான மனித மோதல்களினால் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள பெண் தலைவிகளின் குடும்பங்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதும், அரசு என்ற ரீதியில் இப் பெண்களுக்கான உள ஆற்றுகை மற்றும் மனநல ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

S.Thavaseelanjournalist mullaitivu 0777782259

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *