Wednesday, April 30, 2025
HomeUncategorizedசர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தும் முல்லைத்தீவு ஊடக அமையம்!

சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தும் முல்லைத்தீவு ஊடக அமையம்!

ஊடகவியலாளர்கள்மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தும் முல்லைத்தீவு ஊடக அமையம்.

நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்கள்மீதான தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் மற்றும், அடக்குமுறைகளுக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியமென முல்லைத்தீவு ஊடகஅமையம் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச்சேர்ந்த தம்பித்துரை பிரதீபன் என்னும் ஊடகவியலாளரின் வீடு தாக்கப்பட்டமை மற்றும், அவரின் வீட்டிலிருந்த சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே முல்லைத்தீவு ஊடகஅமையம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளுக்கு சர்வேதச கண்காணிப்பை வலியுறுத்துகின்றோம்.

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள்மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும், அடக்குமுறைச் சம்பவங்களுக்கு சர்வதேசத்தின் கண்காணிப்பு அவசியம் என்பதை முல்லைத்தீவு ஊடகஅமையம் வலியுறுத்துகின்றது.

அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச்சேர்ந்த தம்பித்துரை பிரதீபன் என்னும் ஊடகவியலாளரின் வீடு தாக்கப்பட்டுள்ளதுடன், சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாணம் – அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியிலுள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் வீட்டின்மீது கடந்த 13.06.2024ஆம் திகதி வியாழக்கிழமை, அதிகாலை 12.15 மணியளவில்  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வருகைதந்த, ஐந்துபேர் அடங்கிய வன்முறைக் குழுவினாலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலில் வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும், சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டிலிருந்த ஒருமில்லியன் ரூபாய்க்கும் மேலான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தொடர்ச்சியாக நாடெங்கும், குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியில் பக்கச்சார்பற்ற வகையில் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள்மீதான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இது குறித்த முறைப்பாடுகள் பொலிஸ் மற்றும் ஜனாதிபதி வரையிலான உயர்மட்டத்திற்கு அளிக்கப்பட்ட போதும், இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

அரசின் இந்த நிலைப்பாடே, எந்த குற்றத்தையும் செய்துவிட்டு அதிலிருந்து தப்பிவிடலாம் என்கிற எண்ணபோக்கை ஏற்படுத்தியுள்ளது.

முறைப்பாடு அளிக்கப்படும் போது அது விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், இவ்வாறான அச்சுறுத்தல்கள் நடைபெற்றிருக்காது.கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை அரசு துணைபோவதாகவே எம்மால் பார்க்கமுடிகின்றது.

எனவேதான் தமிழ் ஊடகவியலாளர்கள்மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும், அடக்குமுறைச் சம்பவங்களுக்கு முல்லைத்தீவு ஊடக அமையம் சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்திநிற்கின்றது.

கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் பல்வேறு ஊடகவியலாளர்கள் மீது இராணுவம், பொலிஸ், புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர்களது மிலேச்சத்தனமாக சித்திரவதைகள், தொடர்ச்சியான கண்காணிப்பு அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், அடக்குமுறைச் சம்பவங்கள் என்பன இடம்பெற்றிருக்கின்றன.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்படுதல், அரசாங்கத்தில் அங்கம்வகிக்கின்ற அமைச்சர்களால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகுதல், சட்டவிரோத தொழில்நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களினால் அச்சுறுத்தப்படுதல், தாக்குதலுக்கு உள்ளாகுதல் உள்ளிட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

மேலும் கடந்த காலங்களில் 44 தமிழ் ஊடகவியலாளர் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும், படுகொலைசெய்யப்பட்டும் அதற்கான நீதிகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மீண்டும் தொடர்ச்சியாக தமிழ் இன அடையாளத்தினை கொண்ட ஊடகவியலாளர்கள் என்ற காரணத்தினால் தொடர்ச்சியாக இவ்வாறான அச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும், சித்திரவதைகளும் தமிழ் ஊடக பரப்பினை சேர்ந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் வீடு தாக்கப்பட்டு சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை என்பது, அவரின் சுயாதீனமானதும் வினைத்திறனானதுமான ஊடக செயற்பாட்டிற்கு அடிக்கப்பட்ட சாவு மணியாகும்.

இவ்வாறு தமிழ் ஊடகவியலாளர்களின் ஊடக பணிக்கு இடையூறு  விளைவிக்கும், அச்சுறுத்தல் மேற்கொள்ளும் செயற்பாடுகளை முல்லைத்தீவு ஊடக அமையம் வன்மையாக கண்டிப்பதுடன் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளில் அக்கறையுள்ள உரியதரப்புக்களும், சர்வதேச அமைப்புக்களும் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்  வலியுறுத்தி நிற்கின்றோம். எனக் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments