தமிழ்நாடு நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு நேற்று 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக இருந்த கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 14ஆம் திகதி முதல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ‘செரியாபாணி’ என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 23ஆம் திகதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ‘செரியாபாணி’ கப்பலுக்கு மாற்றாக ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் நாகை – இலங்கை இடையே பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு இன்று தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாகைக்கு வரவேண்டிய பயணிகள் கப்பல் தாமதமானதால் எதிர்வரும் 17ஆம் திகதி வரை இச் சேவை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவை அசௌகரித்தினால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனினும், முன்பதிவு செய்த பயணிகள் 17ஆம் திகதி பயணிக்கலாம் அல்லது பயண திகதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.