Tuesday, April 29, 2025
HomeUncategorizedஅளம்பில் காணி சுவீகரிக்க முயற்சி  தடுத்து நிறுத்தம்!

அளம்பில் காணி சுவீகரிக்க முயற்சி  தடுத்து நிறுத்தம்!

முல்லைத்தீவு மாவடடத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இலங்கை இராணுவத்தின்  சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்கு   சுவீகரித்து வழங்க எடுத்த நான்காவது தடவையாகவும் எடுக்கப்பட்ட முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று (02.05.2024) தடுத்து நிறுத்தப்பட்டது.

குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் ,கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் மற்றும்,கிராம அலுவலர்  உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், அரசியல் கட்சிப் பிரமுகர்களான  முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன் உள்ளிட்டவர்கள் குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

அத்தோடு குறித்த காணியினை அளவீடு செய்து, இராணுவத்திற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையினை அனுமதிக்க முடியாதென அப்பகுதிமக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும், அங்கு வருகைதந்த நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றிருந்தனர். குறித்த பகுதியில் அதிகளவிலான பொலிஸாரின் பிரசன்னம் இருந்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியினை தற்போதுஇலங்கை இராணுவத்தின்  சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்தினர்  கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதனால்
துயிலுமில்லக்காணியின் வெளிப்புறத்திலேயே வருடாவருடம் மாவீரர் நாளில் மாவீரர் நாள் அஞ்சலிகள் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறான சூழலில் கடந்தவருடம் குறித்த மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் விடுவிக்க வலியுறுத்தி மாவீரர்களின் உறவுகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்ததுடன், இவ்வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதியும் அளவீட்டு பணிக்காக வருகைதந்த போது எதிர்ப்பினை வெளியிட்ட பின்னர் அங்கிருந்து சென்றிருந்தனர். இதற்கு முன்னரும் பலதடவைகள் நில அளவைத் திணைக்களத்தினர் இவ்வாறு நில அளவீட்டு முயற்சியில் ஈடுபட்டபோதும் மக்கள் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக  அளம்பில் பகுதியில் குமுழமுனை செல்லும் பிரதான வீதியின் ஒரு புறத்தில் உள்ள அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினையும் (தனியார் காணியினையும்) மற்றைய புறத்தில் தென்னைப் பயிர்ச்செய்கை சபைக் காணியினையும் இலங்கை இராணுவத்தின்  சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்காக 2009 ம் ஆண்டுக்கு பின்னர் கையகப்படுத்தியிருந்தனர் இதன் பின்னர்
தென்னைப் பயிர்ச்செய்கை சபைக் காணியினை நிரந்தரமாக கையகப்படுத்தியுள்ள நிலையில் துயிலுமில்லக் காணியில் இராணுவத்தினர் உணவகம் ஒன்றை மாத்திரமே தற்போது வைத்திருக்கின்றனர்

இந்நிலையில் இந்த காணியினை உயிரிழந்த தமது உறவுகளினை நின்மதியாக நினைவுகூர  தருமாறு மக்கள் பலதடவை கோரியும் இராணுவம் இவ்வாறு தொடர்ச்சியாக அபகரிக்க முயன்றுவரும் நிலையில் மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்

குறிப்பாக இன்று இராணுவத்துக்கு காணி  சுபீகரிக்கும் நடவடிக்கைக்கு துணையாக  முல்லைத்தீவு பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததோடு மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்ப்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர் இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments