முல்லைத்தீவில் தங்கள் சேவைகளை அமைச்சருக்கு பட்டியலிட்ட அரசா சார்பற்ற நிறுவுனங்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ திரு டக்ளஸ் தேவானந்தா நிறுவன அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாலில் ஈடுபட்டார்.
இன்றைய தினம் (17) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் அரசசார்பற்ற நிறுவனங்களின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் நிகழ்கால வேலைத்திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் குறித்த நிறுவனங்களின் குறைநிறைகளை கேட்டறிந்த அமைச்சர் அதற்கான உரிய தீர்வுகளை துறைசார்ந்தோருடன் பேசி பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
இந்த கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன்( நிர்வாகம்) , மேலதிக மாவட்ட செயலாளர் சி.ஜெயகாந் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர், அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டம் ஒப்பீட்டளவில் அதிகளவான தற்கொலைகள்,சிறுவர்துஸ்பிரயோகங்கள்,இளவயது திருமணங்கள்,அதிகளவிலான இளைஞர்கள் போதைவஸ்த்திற்கு உள்ளாதல், போதைப்பொருள்விற்பனை,சட்டவிரோத மதுபான பாவனை உற்பத்தி,பாலியல்துஸ்பிரயோகங்கள், குடும்பபிரிவுகள்,போசாக்கின்மை, வயோதிபர்கள் உயிரிழப்பு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்த மாவட்டமாக காணப்படுகின்றது.
இவற்கை கட்டுப்படுத்த அல்லது இவற்றில் மாற்றத்தினை மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் அரச சார்பற்ற நிறுவனங்கள் எடுத்ததாக இந்த கூட்டத்தில் பேசப்படவில்லை இவற்றுக்கு அப்பால் கிடைத்தபணத்தினை வாங்கிக்கொண்டு அடுத்த கையால் மக்களுக்கு கொடுத்த விபரத்தினை வாசித்து காட்டிவிட்டு சென்று விட்டார்கள்.
இதுதான் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றிவரும் 40 ற்கு மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகளா? என்ற கேள்வி எம்மிடம் எழுந்துள்ளது.
நீங்கள் மக்களுக்கு என்னதான் வழங்கினாலும் மக்கள் சமூகப்பொறுப்புடனும் உயிர்வாழும் விருப்புடனும அவர்களின் மனநிலை இருக்கின்றதா என்பதை புரிந்துகொண்டு உங்கள் உதவிகளை வழங்கிவையுங்கள்