முல்லைத்தீவில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையில் சட்டவிரோத கடற்தொழில்!

முல்லைத்தீவில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையில் சட்டவிரோத கடற்தொழில்-கொக்கிளாயில் 200க்கு மேற்பட்ட சுருக்கு வலைகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையான கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறிவருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் கடற்தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்கள்.

17.04.2024 இன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின் விளக்கினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் பல ஆயிரம் கிலோவில் மீன்களை பிடிக்கின்றார்கள். இதனால் சாதாரன மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கடல் வளம் அழிக்கப்படுவதாகவும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஆகியோர் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த பொலீசாரின் ஒத்துளைப்பும் இராணுவத்தினரின் ஒத்துளைப்பும் தேவை எனவும் நாயாறு புலிபாய்ந்த கல் கடற்கரை பகுதியில் இருந்து கொக்குளாய் வரையிலான கடற்கரையோர பகுதிகளில் இராணுவத்தின் கண்காணிப்பு தேவை என்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளரினால் கடற்தொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாயாறு தொடக்கம் கொக்குளாய் வரையான கடற்பரப்பில் இரவு நேரங்களில் ஒளிபாச்சி மீன்பிடிக்கும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த கடற்படையினர் குறிப்பாக வட்டுவாகல் கடற்படைத்தளத்தில் உள்ள கடற்படையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

இவற்றை நீரியல் வளத் திணைக்களத்தினர், கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.இந்த நடவடிக்கை நாளையில் இருந்து (18) தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

இந்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற ஊறுப்பினர் கு.திலீபன், மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட கடற்படைத் தளபதி, மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, மாவட்ட இராணுவ அதிகாரி, கடற்படை அதிகாரிகள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Admin Avatar