கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரமந்தனாற்று பகுதியில் இளைஞன் ஒருவனால் கத்திக்குத்திற்கு இலக்காகி உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் உயிரிழப்பிற்கு நீதிகோரியும் கைதான சந்தேக நபருக்கு பிணைவழங்கவேண்டாம் என்றும் வலியுறுத்தியும் கிராம மக்கள் ஒன்றிணைந்து 09.04.2027 அன்று மனு ஒன்றினை கையளித்துள்ளார்கள்.
கடந்த 04.04.2024 அன்று கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலத்தில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியினை பார்வையிட்டுவிட்டு திரும்பி சென்ற போது வீதியில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மயில்வாகனபுரம் பிரமந்தனாற்றினை சேர்ந்த 30 அகவையுடைய குடும்பஸ்தரான சவரிமுத்து ஜோன்பற்றிஸ் என்பவர் மீது பலதடவைகள் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்று அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவ் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை தர்மபுரம் பொலீசார் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதந்தனாறு,மயில்வாகனபுரம்,கல்லாறு போன்ற பகுதிகளில் இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்தக்கோரியும் உயிரிழந்த குடும்பஸ்தருக்கு நீதிகோரியும் கிராம மக்கள் நெத்தலியாறு பாலத்தில் இருந்து கவனயீர்ப்பாக தர்மபுரம் பொலீஸ் நிலையம் வரை சென்று பொலீசாருக்கும்,சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் மனு ஒன்றினை கையளித்துள்ளார்கள்.
குறித்த குற்றவாளிக்கு கடூழிய தண்டனை வழங்கு,பிணைவழங்காதே,பிள்ளைகளின் உயிர்களை பாதுகாக்கவேண்டும்,போன்ற பதாதைகளை தாங்கியவாறு கிராம மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கும்,முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் எல்லைப்பகுதியில் காணப்படும் விசுவமடு,பிரமந்தனாறு,மயில்வாகனபுரம்,கல்லாறு,பேப்பாரப்பிட்டி,புன்னைநீராவியடி,போன்ற கிராமங்களில் சிற சிறு பிரச்சினைகளுக்கும் கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்கும் இளைஞர்கள் கும்பல்களில் அட்டகாசங்கள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த பகுதிகளில் பொலீஸ் காவரண் ஒன்று அமைத்து கிராமத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களையும் அத்துமீறும் இளைஞர் குழுக்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.