முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள தேராவில் குளம் நிரம்பி நீர் வெளியேற முடியாத நிலையில் காணப்படுவதால் குளத்தினை அண்டிய 10 வரையான குடும்பங்களின் வீடுகளுக்குள் மழைவெள்ள நீர் தற்போது புகுந்து காணப்படுவதால் உறவினர்களின் வீடுகளில் தங்கிவாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இறுதிப்போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்ட தேக்கங்காட்டு பாதை போருக்கு பின்னர் அரசாங்கதினால் புனரமைக்கப்பட்டதால் வந்த பிரச்சினை.
தோராவில் குளத்தின் கட்டினை ஒட்டியே புதுக்குடியிருப்பு பரந்தன் வீதி காணப்பட்டது 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்ற காலப்பகுதியில் குறித்த வீதியில் உள்ள தோரவில் குளத்து நீர் வெளியேறும் பாலம் ஒன்று சேதமடைந்ததாரல் அருகில் உள்ள தேக்கங் காடுகள்; ஊடாக விடுதலைப்புலிகள் பாதை அமைத்தார்கள்.
அதன் பின்னர் இன்றுவரை அந்த பாதையினையே மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள் குளத்து நீர் வெளியேறுவதற்கு ஏற்றவகையில் எதுவும் அமைக்கப்படாததால் நீர் வரத்து அதிகரித்த காலத்தில் குளம் நிரம்பி மக்கள் குடியிருப்பு வீடுகளுக்குள் நீர் தேங்கிய நிலையில் தற்போதும் காணப்படுகின்றது.
இந்த மக்களின் பிரச்சினை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவநிலையம்,வீதி அபிவிருத்தி அதிகார சபை,கமநலசேவைதிணைக்களம்,வனவளத்திணைக்கம் கிராம சேவையாளர் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களை ஒருங்கிணைத்து பல தடவைகள் சந்திப்புக்கள் கருத்துக்கள் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த மக்களின் நிலை தொடர்பில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்கஅமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையிலான குழுவினர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்கள்.
மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பணிப்பில் உடனடியாக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் 06.02.2024 இன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் திணைக்கள அதிகாரிகள்உள்ளிட்டவர்கள் கலந்துரையாடி முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்கள்.
ஏ35 வீதியில் தேராவில் தேக்கங்காட்டு வீதியில் பாலத்தை அமைத்து வெள்ள நீரினை அகற்றுவது என்றும் அதற்காக பாலத்தை அமைப்பதற்கு 5.6 மில்லியன் ரூபா தேவை என கணக்கிடப்பட்டுள்ளது.
அதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் நிதி ஒதுக்கீட்டில் தங்களுடைய பொறுப்பில் செய்து தருவதாக வாக்குறுதியளித்திருக்கிறார்கள்.
அதன் பணியை எதிர்வரும் திங்கட்கிழமை (12.02.2024) ஆரம்பப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் பாலம் அமைப்பு மற்றும் நீரினை வெளியேற்றுவதில் ஏற்படும் சிக்கல்களுக்காக வீதியினை அண்மித்த பகுதிகளில் இருக்கின்ற தேக்க மரங்களை மரக்கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் தேவைக்கேற்ப வெட்டி அகற்றுவதற்கும் , அங்குள்ள சிறு புதர்களை வனவள திணைக்களத்தின் அனுசரணையை பெற்று கிராம மக்களின் சிரமதானத்தின் மூலம் அகற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.