முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக் தொடர்பிலான விசாரணை முடிவடையும் வரை எந்தவிதமான கூட்டங்களோ , நிகழ்வுகளிலோ ஏற்பாடு செய்ய முடியாது அவ்வாறு மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்திற்கும் அனைத்து கழகங்களுக்கும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் (FFSL) சிறப்பு உத்தரவு ஒன்றினை வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை உதைபந்தாட்ட சங்கம் அறிவித்திருந்தும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டதனையடுத்து நேற்றையதினம் (21.12.2023) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கம் தொடர்பிலான விசாரணை தற்போது இடம்பெற்று வருகின்றது. FFSL ஆல் விசாரணை முடிவடையும் வரை முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தோம்.
இதனை மீறி எதிர்வரும் 23 டிசம்பர் 2023 அன்று அனைத்து உதைபந்தாட்ட சங்கங்களிற்கும் நீங்கள் ஒரு கூட்டத்தை அழைத்திருப்பதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது FFSL வழங்கிய உத்தரவுகளுக்கு எதிரானது.
FFSL ஆல் விசாரணை முடிவடையும் வரை முல்லைத்தீவு கால்பந்து சங்கத்தின் எந்தவொரு நபராலும் / நபர்களாலும் எந்தவொரு கூட்டங்களோ அல்லது நடவடிக்கைகளோ ஏற்பாடு செய்யப்பட மாட்டாது என்பதை இதன்மூலம் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எந்தவொரு நபர்கள், அதிகாரிகள் அல்லது கிளப்புகள் இந்த உத்தரவை மீறினால் அது FFSL ஆல் கடுமையான தடைகளுக்கு வழிவகுக்கும்.
விசாரணை முடியும் வரை முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு கூட்டங்களிலும் அல்லது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் என அனைத்து கழகங்களுக்கும் இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சங்கங்கள் இந்த உத்தரவை மீறினால், அது FFSL ஆல் கடுமையான ஒழுங்கு மற்றும்/அல்லது நெறிமுறைத் தடைகளுக்கு வழிவகுக்கும்.
தயவுசெய்து அனைத்து சங்கங்களுக்கும், உறுப்பினர்களுக்கும் இந்த உத்தரவைத் தெரிவித்து கொள்கிறோம் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் பிரதிகள் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர், விளையாட்டுதுறை அமைச்சு, முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் உடனடி கவனத்திற்காக பிரதிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.