வவுனியா பல்கலைக்கழகத்திற்கு யானை வேலி கண்டுபிடிப்பு பெயரை ஈட்டி தந்துள்ளதில் பெருமை கொள்வதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட யானை வேலியான தொங்குவேலி புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பாடசாலைக்கு அமைத்து கொடுக்கும் நிகழ்வு நேற்று (06.10.2013) நடைபெற்றுள்ளது இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,யானை மனித முரண்பாடு என்பது இலங்கை மட்டுமல்ல உலக நாடுகளிலே இருக்கின்றது. யானையை கொல்லுவதென்பது இயற்கை சமநிலையை குழப்புகின்ற சூழல் உருவாகும்.
நீண்ட கால ஆய்வின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு தான் கலாநிதி விஜயமோகனின் கண்டுபிடிப்பு. இதனை நான் பாராட்டுகின்றேன். அவருடைய கண்டுபிடிப்பின் மூலம் பல்கலைக்கழகமும் சிறந்த பெயரை பெறுகின்றது. பல்கலைக்கழகம் என்ற ரீதியில் பெருமையடைகின்றோம்.
தொடர்ச்சியாக மனித யானை முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு உலக வங்கியின் நிதி உதவியில் வவுனியா பல்கலைக்கழகத்தின் செயற்பாட்டின் மூலம் இப் பிரதேசத்திற்கு இவ் வேலியானது கிடைத்திருக்கின்றது. சரியாக பராமரிப்பதன் மூலம் மக்களுக்கோ, பயிர்ச்செய்கைக்கோ தீங்கு விளைவிப்பதனை தவிர்ப்பதன் ஊடாக உலகத்தை சென்றடைவதற்கான வாய்ப்பாக இருக்கின்றது. அதனூடாக எமது பல்கலைக்கழகம், இப் பிரதேசம் ,பிரதேச மக்கள், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை.
யானை மனித முரண்பாடு என்பது தற்போதைய காலத்தில் கூடுதலாக காணப்படுகின்றது. மனிதர் யானைகளுடன் இணைந்து வாழ்வதனை இந்த கண்டுபிடிப்பானது கொடுக்கின்றது. அதன்மூலம் உயிரினங்களை பாதுகாத்து மக்களும் வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்கும். இக் கண்டுபிடிப்பின் மூலம் பாரியளவு நன்மைகளை வழங்கும்.
அதாவது நிம்மதியாக நித்திரை கொள்வதற்கும் , நிம்மதியாக கல்வி கற்பதற்கும் இவ்வாறான ஒரு சூழல் இலங்கையில் எல்லா இடத்திலும் பார்க்க முடியாது. நகர்ப்புறங்களிலுள்ளவர்கள் அனைத்து விதமான வசதி வாய்ப்புகளுடனும் கல்வி கற்கிறார்கள். இந்த இடத்திற்கு வந்தால் மாணவர்கள் எவ்வாறு நிம்மதியாக கல்வி கற்பார்கள் என்பது அதிசயமாக இருந்தது.
மாணவர்கள் பயமில்லாமல் கல்வியை கற்பதற்கும் , பிரதேச மக்கள் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கும் , அல்லது வாழ்வாதாரத்தை விவசாயத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்கும் இந்த வேலியானது பாரியளவு பங்களிப்பை வழங்கும் என்றார்.