முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் பதவி விலகியமைக்கு முக்கிய பொறுப்பு தொல்லியல் திணைக்களமாக இருக்கின்றது ஏன் என்றால் கட்டளையினை மீறி நடப்பதற்கு அனுசரணையாக இருந்துள்ளார்கள் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் த.பரஞ்சோதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
04 ஆவது நாளாக தொடரும் முல்லைத்தீவு மாவட்ட சட்டதரணிகள் சங்கத்தின் பணி புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றார்கள் இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் கடந்த 02.10.2023 அன்று ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(05) நான்காவது நாளாக தொடர்கிறது
நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்
அதற்கமைய கடந்த 02.10.2023 ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று (05.10.2023) நான்காவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு குருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் த.பரஞ்சோதி அவர்கள்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகலானது முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகளுக்கும் மக்களுக்கும் ஏனையோர்களுக்கும் அதிர்ச்சியான தகவலாக ஏற்பட்டுள்ளது உண்மையில் நீதிபதியால் வழங்கப்பட்ட கட்டளைகள் தீர்ப்புக்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கும் மீளாய்வுகள் விண்ணப்பங்கள் செய்வதற்கும் போதிய சட்டமுறைமைகளும் சட்ட ஏற்பாடுகளும் இருக்கின்றன அதனை மீறி கட்டளைகளையோ தீர்ப்புக்களை மாற்றுமாறு அந்தந்த நீதிபதிகளை வற்புறுத்துவதும் அவர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதும் அவர்களின் சுயாதீனமான தன்மைக்கு இடையூறாக தனிப்பட்ட விடையங்களை விமர்சிப்பதும் போன்ற விடையங்கள் முற்றாக தவிர்க்கப்படவேண்டியதாகும்.
இத்தகைய செயற்பாடுகள் ஏற்படுமாக இருந்தால் நேர்மையான நீதியினை வழங்கமுடியாத சூழ்நிலைகள் ஏற்படும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு ஏற்பட்ட பாதிப்பானது நாட்டில் நீதியில்லை நீதித்துறை சுதந்திரம் இல்லை சட்டத்தின் ஆட்சி சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை என்பதன் எடுத்துக்காட்டாக அமைக்கின்றது.
இந்த விடையமானது உண்மையில் ஏற்கனவே குருந்தூர்மலையில் ஏற்பட்ட பிணக்காகும் குருந்தூர்மலையில் ஏற்கனவே ஆதிசிவன் ஜயனார் கோவில் சிவனும் ஜயானருக்கும் அடையாளமாக சூலமும் வைத்து வழிபாடுகள் பொங்கல்களை இந்துக்கள் மேற்கொண்டு வந்துள்ளார்கள் அதற்கான நிர்வாக அமைப்புகூட இங்கு இயங்கிக்கொண்டிருந்திருக்கின்றது.
2018 ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களமும் பௌத்த மதத்தினை சேர்ந்தவர்களும் அங்கு வந்தபோது இருதரப்பிற்கும் இடையில் அமைதிக்கு பங்கமான சூழ்நிலை ஏற்பட்டமையினால் குறித்த பௌத்த மதத்தினை சேர்ந்தவர்களால் ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்தில் முறைப்படு செய்யப்பட்டு அனைவரும் அழைத்து விசாரிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்காக கொண்டுவரப்பட்டுள்ளது
அதன் பின்னர் அது தொடர்பாக ஆராய்ந்த போதுஉண்மையில் இந்துக்கள் வழிபாடுகளை ஏற்கனவே மேற்கொண்டு வந்துள்ளார்கள் என்பதும் தொல்லியல் திணைக்களத்தினர் தாங்கள் தொல்லியல் அகழ்வாராச்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பமும் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வாராச்சிகளை மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள்
அதன்போது பல்வேறு விதமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்,பிரதேச செயலாளர்,கிராமசேவையாளர் பல்கலைக்கழகங்களை சேர்ந்த வரலாற்று பேராசிரியர்கள் மத்தியில் அகழ்வாராச்சி இடம்பெறவேண்டும் என்று ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அகழ்வாராச்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வாராச்சியினை மேற்கொண்ட அதேவேளையில் அங்கு பௌத்த விகாரையினை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
ஆகவே அதனை அறிந்து கொண்ட இந்து மதத்தினை சேர்ந்த நிர்வாகத்தினரும் ஆதரவாளர்களும் நீதிமன்றில் விண்ணப்பம் அனுப்பப்பட்ட நிலையில் மறுதரப்பிற்கும் அனுப்பப்பட்டு அவர்களும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுடன் தொல்லியல் திணைக்களத்தினர் களவியயம் ஒன்றினை மேற்கொள்ள இரு தரப்பும் இணங்கி இருந்தார்கள்.
கள வியயம் என்பது ஒரு நீதிபதி அங்கு செல்கின்ற அமர்வாகத்தான் கருதப்படவேண்டும் அங்கு வாதி,பிரதிவாதி,அவர்களுக்குரிய சட்டத்தரணிகள் மாத்திரம் அங்கு வாதங்களையும் பிரதிவாதங்களையும் சமர்ப்பணங்களையும் செய்யமுடியுமே தவிர பொதுமக்களோ வேறு அதிகாரிகளோ யாருமே அதனை செய்யமுடியாது.
அதில் உள்ள கட்சிக்காரர்களும் சட்டத்தரணிகளும் கலந்துகொள்ளவேண்டிய தேவைப்பாடு இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அவர்கள் நீதிபதியுடன் கதைப்பதற்கும் நீதிபதிக்கு சில விடையங்களை தெளிவுபடுத்துவதற்கும் எத்தனித்த போது நீதிபதி அவ்வாறு அனுமதிக்கமுடியாது இங்கு வேறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் எல்லோருக்கும் சந்தர்பத்தினை வழங்கமுடியாது முக்கியமாக களவியத்தினை மேற்கொள்ளவேண்டியதன் நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்து அதனை முடித்துக்கொண்டு அதற்கான கட்டளைகளையும் வழங்கியுள்ளார்
அதில் அதிர்ப்த்தியுற்ற சரத்வீரசேகரா அவர்கள் பாராளுமன்றத்தில் தனது சிறப்புரிமையினை பயன்படுத்தி மாவட்ட நீதிபதியினை அச்சுறுத்தும் விதமாகவும் அதன் பின்னர் அவர் தனிப்பட்ட விடையங்கள் தொடர்பாகவும் தொடச்சியாக கருத்துக்களை தெரிவித்து ஒரு நீதிபதியை அவமானத்திற்குள்ளாக்கி அழுத்தங்களை பிரயோகிக்கும் அளவிற்கு அல்லது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் அளவிற்கு செயற்பட்டுள்ளார்.
இவரின் இந்த கருத்திற்காக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் இருதடவைகள் பணி புறக்கணிப்பினை மேற்கொண்டோம் அதன் மூலம் இவ்வாறான தலையீடுகள் குறையும் அல்லது திருத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்திருந்தோம் அவ்வாறு எதுவும் இடம்பெறாமல் தொடர்ச்சியாக செயற்பட்டதன் காரணமாகத்தான் மாவட்ட நீதிபதி அவர்கள் பதவி விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது
அவரது கடிதத்தில் குறிப்பிட்ட விடையங்கள் ஒன்று உயிர் அச்சுறுத்தல் தொடர்ச்சியான அழுத்தங்கள் ஆகவே அவை பிரயோகிக்கப்படாவிட்டால் இந்த நாட்டைவிட்டு செல்லவேண்டிய சூழ்நிலை தற்போது இருந்திருக்காது ஆனால் தற்போது பாராளுமன்றத்திலும் அரசாங்கத்தினாலும் சொல்லப்படும் விடையம் அவர் ஒரு நீதிபதி பிடியாணை விட்டிருக்கலாம் நடடிவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் என்று அதற்கான அவகாசம் கொடுத்ததும் இல்லை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இல்லை ஆனால் அவர்கள் விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையம் அழுத்தங்களையும் பிரயோகித்து வந்துள்ளார்கள்.
இந்த விடையம் குருந்தூர்மலை விவகாரத்தில் இருந்து எழுந்தது என்பதை தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது.
வெறுமன இருந்த கல்லுகளும் மலையும்,மணலுகளுமாக இருந்த இடம் தற்போது விகாரை ஒன்றினை கட்டி பௌத்த வழிபாட்டு இடமாக மாற்றப்பட்டுள்ளது ஆகவே கட்டளை மீறப்பட்டுள்ளமைதெட்டத்தெளிவாக தெரிகின்றது இதில் நீதித்துறை அமைச்சரின் கூற்றுக்களும் நீதிபதியின் பிரச்சனை அவரே அதனை தீர்த்திருக்கவேண்டும் அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்ற விதமாக கூறியுள்ளார் அகவே நீதிசேவை ஆணைக்குழுதான் அதனை செய்யவேண்டும் என்று
எவ்வாறு இருந்தாலும் ஒரு நீதிபதி பதவி விலகி செல்கின்றார் என்றால் மொத்தநாட்டிற்கே அவமானமான விடையமும் எல்லோருமே தத்தமது கடமைகளை உணர்ந்து செயற்படவேண்டிய விடையமாக இருக்கின்றது
இதற்கு முக்கிய பொறுப்பு தொல்லியல் திணைக்களமாக இருக்கின்றது ஏன் என்றால் கட்டளையினை மீறி நடப்பதற்கு அனுசரணையாக இருந்துள்ளார்கள்.
அதேபோல் அச்சுறுத்தல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதன் அடிப்படையில்தான் இவ்வாறான விடையங்கள் இடம்பெற்றுள்ளன.
முல்லைத்தீவ மாவட்ட சட்டத்தரணிகள் நான்காவது நாளாக தமது பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டிருக்கின்றார்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
09.10.2023 அன்று கொழும்பு உச்சநீதிமன்றத்திற்குமுன்பாக சகல சட்டத்தரணிகளும் இணைந்து பகிஸ்கரிப்பினையும் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளோம் இதன் மூலம் தீர்வுகள் எட்டப்பட் வாய்ப்புக்கள் முயற்சிகள் இருந்தால் பணிபகிஸ்கரிப்பு தொடர்பில் சில தீர்மானங்களை எடுப்போம் இல்லாவிட்டல் பல்வேறு வடிவங்களில் பகிஸ்கரிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நீதிபதிக்கு தீர்வு கிடைக்கும்வரை நியாயம் கிடைக்கும்வரை இந்த நாட்டில் நீதித்துறை சுதந்திரமும் நீதிபதிகளின் சுயாதீனதன்மையும் பேணப்படும் நிலமை ஏற்படும்போதுதான் புறக்கணிப்பு நடவடிக்கை முற்றுப்பெறும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.