முல்லைத்தீவு வைத்தியசாலையில் உள்ள மருத்துவ இயந்திரம் ஒன்றை முல்லைத்தீவில் இருந்து அனுராதபுரம் மாற்றுவதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் செல்வம் எம்.பி
முல்லைத்தீவு வைத்தியசாலையில் உள்ள மருத்துவ இயந்திரம் ஒன்றை முல்லைத்தீவில் இருந்து அனுராதபுரம் மாற்றுவதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை எனவும் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றால் அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்
முல்லைத்தீவு வைத்தியசாலையில் இருக்கும் Endoskopie
இயந்திரத்தினை அனுராதபுர வைத்தியசாலைக்கு காெண்டு
செல்ல அனுராதபுர வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் நேற்று முதல் தகவல் ஒன்று பரவலாக வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவில் பரவலாக பேசப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடமும் சிலர் இந்த விடயம் தொடர்பில் தலையிடுமாறு கோரியுள்ளனர்
இந்நிலையில் இவ்விடயம் சம்பந்தமாக தெளிவினை பெற்று கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வீ.சண்முகராஜாவை
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் ஆகியோர் இன்றையதினம்(04) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருக்கின்ற இயந்திரம் ஒன்றினை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அதன் உண்மை தன்மையினை அறியும் விதமாக நானும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தப விசாளர் விஜிந்தனும் நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று அதற்கு பொறுப்பான வைத்திய அதிகாரியை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.
அவ்வாறான கோரிக்கை கடிதங்களோ அல்லது தொலைபேசி மூலம் அழைப்போ கிடைக்கவில்லை. அவ்வாறு வருகின்ற போது அதனை நாங்கள் மீள வழங்க முடியாது எனவும் எடுத்து கூறினார்கள்.
அனுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறப்படுவது வதந்தியாகவே பரப்பப்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அவ்வாறான விடயம் இடம்பெறவில்லை என்பதனை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
ஆகவே யாரும் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் இருக்கின்ற வைத்தியசாலையில் வசதிகள் குறைவாக இருந்தாலும் அனைவரும் சிறப்பாக வேலை செய்கின்ற நிலை காணப்படுகின்றது.
தென்னிலங்கைக்கு உபகரணங்கள் கொண்டு போகின்ற சந்தர்ப்பங்கள் வருமாக இருந்தால் நிச்சயம் அதனைத் தடுத்து நிறுத்துவோம். தற்போது வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்ற நிலையிலே குறைந்தளவு வைத்தியர்களுடன் வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றது. மக்களும் சென்று பயன்பெற்று வருகின்ற சூழ்நிலையிலே இவ்வாறான இயந்திரங்களை கொண்டு செல்வதாக இருந்தால் அனுமதிக்க முடியாது.
குறிப்பாக முல்லைத்தீவிலே போரால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்ற வகையில் முக்கிய கவனம் செலுத்துவோம் என்பதனை கூறிக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.