நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைக்களும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சற்குணராஜா அண்மையில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் இணைந்து அவசர கூட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளார்கள். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் கூட்டம் ஒன்று விஷேடமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு விடயங்கள் கூறப்பட்டுள்ளது. எமது மாவட்ட நீதவான் பதவி விலகல் தொடர்பானது. அச்சுறுத்தல், அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது என்பதாகும்.
நீதித்துறை என்பது சுதந்திரமாக செயற்பட வேண்டும். நீதிதுறை ஒழுங்கான சுதந்திரமாக இயங்கி வந்திருந்தாலும் ஓர் இரு இடங்களில் இந்த சுதந்திரமானது பாதிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் இம்மாவட்டத்தின் நீதிபதி ஒருவர் இராஜினாமா செய்யும் அளவிற்கு நீதித்துறை சுதந்திரம் பாதிக்கப்பட்டது அல்லாமல் நீதிபதியின் சுயாதீனமான தன்மைகளும் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கின்றது.
நாம் ஏற்கனவே இரு தடவை பணி பகிஷ்கரிப்பை செய்திருந்தோம். அதாவது முதல் தடவையாக நீதிபதியின் செயற்பாடுகள் தொடர்பாக பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் செய்யப்பட்ட கூற்றுக்கள், இரண்டாவதாக அதே போன்று அவரின் சொந்த விடயங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட கூற்றுக்கள் அவ்வாறான நிலமையில் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறி எமது பணி புறக்கணிப்பை மேற்கொண்டு இலங்கை சட்டதரணிகள் சங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுக்கும் நாங்கள் இதை அனுப்பியிருக்கின்றோம். ஆனால் இவ்விடயங்கள் தாெடர்பில் எவ்விதமான முன்னேற்ற விதமான செயற்பாடுகளையும் எம்மால் கண்டுகொள்ள முடியவில்லை.
இறுதியாக மாவட்ட நீதிபதி அவர்கள் இராஜினமா செய்து அதற்கான காரணங்களை வெளிப்படுத்தியதில் இருந்து நீதி துறைக்கான சுதந்திரம் புறக்கணிக்கப்பட்டும், நீதிபதியின் சுயாதீன தன்மைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நேரடியாக காணக்கூடியதாக இருக்கின்றது.
அந்தவகையில் இரண்டாவது விடயங்களை வலியுறுத்த விரும்புகின்றோம். முதலாவதாக நீதித்துறை சுதந்திரமாக செயற்படுவதற்கு எந்த இடையூறுகளும் ஏற்படுத்த கூடாது, சுதந்திரமாக செயற்படுவதை உறுதி செய்ய வேண்டும். நீதிபதிகள் சுயாதீனமாக செயற்படுவதற்கு எந்தவிதமான இடையூறுகளும் வேறு துறைகளாலே, அதிகாரிகளாலோ மேற்கொள்ள கூடாது. அவ்வாறான இட நிலமைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலே நீதித்துறை சுதந்திரமாக மக்களுக்கு பிரயோசனமான வேலைகளை செய்ய கூடியதாக இருக்கும்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் , சட்டத்தரணிகள், மக்கள் எல்லோரும் பாதிக்கப்பட்ட நிலையிலையே இருக்கின்றார்கள். ஏனெனில் நீதிபதிக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டதனால் கவலையடைந்திருக்கின்றார்கள்.இவ்வாறான செயற்பாடுகள் இனிமேலும் தொடரக்கூடாது, வேறு நீதிபதிகளுக்கும் அவ்வாறான நிலமை ஏற்பட கூடாது எனவும் சட்டத்தரணிகளாகிய நாங்கள் நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் எனும் நன் நோக்கத்துடனும் நாங்கள் இந்த பணி புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்திருக்கின்றோம்
ஆகவே நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைக்களும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபட இருக்கின்றோம். அத்துடன் நாளைய தினம் வடக்கு கிழக்கில் உள்ள சட்டதரணிகள் சங்கத்தினரும் ஒன்று திரண்டு நாளையதினம் முல்லைத்தீவில் மாவட்ட நீதவான் நீதிமன்ற முன்றலிலே பணி புறக்கணிப்பை அமைதி வழியாக நடாத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.