கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி இழைக்கப்படும் நிலையே காணப்படுகின்றது து.ரவிகரன்


கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி இழைக்கப்படுமோ என்ற நிலையே காணப்படுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,இன்றைய தினம் உலக சமாதான தினமாகும் ஆனால் இலங்கையை பொறுத்தவரை சமாதானம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கின்றது.  

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி இழைக்கப்படுமோ என்ற நிலையே காணப்படுகின்றது. அதேபோன்று ஐநாவின் ஆணையாளர் நாயகம் இலங்கையிலே போர்க்குற்றம் மீறப்பட்டுள்ளது, மனித உரிமை மீறப்பட்டுள்ளது, வறுமையில் இலங்கை 25%ஆக இருக்கின்றது, சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

எங்களுடைய கதறல்கள்,  கூக்குரல்கள் வீதிகளில் நின்று போராடுகின்ற போராட்டங்கள் என அத்தனை போராட்டங்களாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கருத்து குறிப்பிடப்பட்டும் சர்வதேச நாடுகள் ஏன் இதுவரை தலையிடவில்லை. இப்படி ஒரு கொடுமையான அரசுக்கு கீழ் தான் நாம் வாழ்கின்றோம். 

வடக்கு கிழக்கு மக்களின் நிலங்களை எடுக்கின்றார்கள், சிறுக சிறுக மதங்களை அழிக்கின்றார்கள் பௌத்த மயமாக்குகின்றார்கள். கடலும் பறிபோய் கொண்டிருக்கின்றது. இப்படி எமது வாழ்வாதாரம் உட்பட நிலங்களையும் அபகரித்து எங்களை பூர்வீகமற்றவர்களாக்குகின்றார்கள் இந்நிலை மாற வேண்டும்.  

சனல் 4 ஊடகத்தில் ஈஸ்டர் குண்டு தாக்குதல் காணொளி வெளியானதன் பிற்பாடு 300க்கு  மேற்பட்ட மக்கள் இறந்ததற்காக எல்லோரும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்கள். அதை நாம் மறுக்கவில்லை. கொலைகார கும்பல் தான் ஆட்சியில் இருக்கின்றது. ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்து வந்திருக்கின்றது. என்பதற்கு மறுப்பதற்கில்லை ஆனால் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்து பல ஆண்டு காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமை இந்த அரசாங்கத்திற்கு ஏன் எங்கள் நிலமை அவர்களது பார்வையில் படவில்லை. சர்வதேசம் நேரடியாக இதற்கு துணைநிற்க வேண்டும் அல்லது சர்வதேச ஆணையாளர் அறிக்கைகேற்ப கருணை காட்டி இலங்கை அரசாங்கத்தை சர்வதேச பொறிமுறைகுள் விசாரணைக்குட்படுத்தி நீதியினை பெற்றுதர வேண்டும் என்றார்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *