கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் எட்டாவது நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (14) இன்று இடம்பெற்ற நிலையில், ஐந்து மனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், துப்பாக்கி சன்னம் ஒன்றும், அத்தோடு அவர்களுடைய நீளகாற்சட்டையில் இ-1124 இலக்கமும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டன.
இந்நிலையில் எட்டு நாட்கள் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தவாரம் செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிலையில் எட்டாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (14) இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல், சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், ரணித்தா ஞானராசா, கிராம சேவையாளர், தடயவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வு நடவடிக்கையின் போது ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதுடன் ஆடையொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குரிய இ-1124 அடையாள இலக்கமும் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அகழ்வுபணியானது நாளையும் தொடரும் என சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
கொக்குத்தொடுவாய் எட்டாம் நாள் இன்றைய அகழ்வினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களானசாள்ஸ் நிர்மலநாதன் ,வினோ நோகராதலிங்கம் ஆகியோர் பார்வையிட்டிருந்தனர்.